ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?


பழகுனர் உரிமம் :

☢ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முதலில் பழகுனர் உரிமம் (Learner′s License Registration) பெற வேண்டும். பழகுனர் உரிமம் பெற்ற நாள் முதல் 30 நாட்களுக்குள் சாலை விதிகளை நன்றாகப் புரிந்துகொண்டு, நெரிசல் மிகுந்த இடங்களிலும் வாகனத்தை நன்றாக ஓட்டிப் பழகி, வாகனத்தை ஓட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பழகுனர் பெற வேண்டும்.

☢ நீங்கள் வசிக்கும் பகுதிக்குரிய உரிமம் வழங்கும் அலுவலகத்தில் தான் ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். டிரைவிங் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றவராக இருப்பின் அவர்கள் டிரைவிங் ஸ்கூல் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

☢ படிவம் 4 நேரடியாக விண்ணப்பிப்பவர்களுக்கும், படிவம் 5 டிரைவிங் ஸ்கூல் மூலமாக விண்ணப்பிக்கிறவர்களுக்கும் என்று தனித்தனியாக விண்ணப்பங்கள் உள்ளன.

தகுதிகள் :

👉 50 CCக்கு குறைவான திறன் உடைய கியர் இல்லாத மோட்டார் வாகனம் ஓட்டுவதற்கு பழகுனர் உரிமம் பெற வேண்டுமெனில் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.

👉 கியர் உள்ள மோட்டார் வாகனம் மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு 18 வயது நிறைந்திருக்க வேண்டும்.

👉 பொதுவாக போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கு 20 வயது முடிந்திருக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய படிவங்கள் :

✓ படிவம் - 1 - LLR விண்ணப்பம்

✓ படிவம் - 2 - உடல் தகுதிச்சான்று

✓ படிவம் - 14 - மருத்துவச் சான்று

முகவரி :

முகவரிக்கான ஆதாரமாக கீழே உள்ள ஏதேனும் ஒரு சான்றின் நகலை இணைக்கப்படல் வேண்டும்.

✓ பிறப்புச்சான்று

✓ பள்ளிச்சான்று

✓ பாஸ்போர்ட்

✓ LIC பாலிசி

பழகுநர் உரிமம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்?

☢ வட்டார போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I/II அவர்களிடம் நேரில் சென்று வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும்.

விண்ணப்பித்த எத்தனை நாட்களுக்குள் LLR வழங்கப்படும் ?

✍ வாகனத்தை ஓட்டிக்காட்டி தேர்ச்சி பெற்ற நாளன்றே LLR (ஓட்டுநர் உரிமம்) சான்றிதழ் வழங்கப்படும்.

ஓட்டுநர் உரிமம் :

​☢ ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு LLR சான்று பெற்று 30 நாட்கள் முடிந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

☢ ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பப் படிவம்-4 உடன் வாகனத்தின் பதிவுச்சான்று (RC Book), இன்சூரன்ஸ் சான்று, சாலை வரிச்சான்று, மாசுகட்டுப்பாடு சான்று ஆகியவற்றை இணைக்க வேண்டும். போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகன தகுதிச்சான்று இணைக்கப்பட வேண்டும். சொந்த வாகனம் இல்லையென்றால் வாகன உரிமையாளரின் அனுமதிச்சான்று, மற்றும் 3 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

☢ போக்குவரத்து வாகனங்களுக்கு சேவைகட்டணமாக ரூ.50 மட்டும் செலுத்த வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு கட்டணமாக ரூ.250 செலுத்த வேண்டும். இதுவே ஒரு பைக் மற்றும் காருக்கு சேர்ந்து எடுத்தால் 250 + 250 = ரூ.500 மற்றும் இதனுடன் சேவைக்கட்டணமாக ரூ.100-ம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

ஒருவர் எத்தனை ஆண்டுகள் வரை வாகனம் ஓட்ட அனுமதி?

☢ வாகனம் ஓட்டுவது ஓட்டுபவரின் உடல் ஆரோக்கியத்தைப் பொருத்தது. எனவே ஒருவரது வயது, உடல் நிலையைப் பொருத்து அவருக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் வரை மட்டுமே வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படும்.

புதிய முகவரியை ஓட்டுநர் உரிமத்தில் பதிவு செய்யும் முறை :

✍ பழைய ஓட்டுநர் உரிமத்தில் இருக்கும் முகவரியில் மாற்றம் இருப்பின், அதற்குரிய ஆதாரத்துடன் விண்ணப்பித்து புதிய முகவரியுடன் கூடிய ஓட்டுநர் உரிமத்தை வாங்கிக்கொள்ள வேண்டும். புதிய முகவரியை பதிவு செய்ய புதிய முகவரியுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், எல்.ஐ.சி. பாலிசி, வீட்டு வரி ரசீது போன்றவற்றை ஆதாரமாக அளிக்கலாம்.

✍ மேலே குறிப்பிட்ட ஆவணங்கள் எதுவும் உங்களிடம் இல்லை என்றால் குடும்ப அட்டை, வீட்டு வரி ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது போன்றவற்றில் ஏதாவது ஒன்றை ஒரு அனுமதி பெற்ற பத்திரத்துறை பதிவாளரிடம் சான்றாக அளித்து, அவரிடமிருந்து புதிய முகவரிக்கான வாக்குமூலம் வாங்கியும் இணைக்கலாம். உள்ளூர் முகவரியாக இருந்தாலும் வேறு பகுதியாக இருந்தாலும் இரண்டிற்கும் ஒரே நடைமுறை தான் பின்பற்றப்படுகிறது.

பிற மாநிலங்களுக்கு சென்றால் அங்கும் புதிய ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டுமா?

✍ புதிய ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் முகவரி மாற்றத்திற்குரிய நடைமுறையையே கடைபிடித்தால் போதுமானது. ஆனால், இருக்கின்ற மாநிலத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அதிகாரியை அணுகி, தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும்.

✍ இடம்பெயர்ந்து செல்கின்ற மாநிலத்தில் நீங்கள் புதிதாக வசிக்கும் புதிய வசிப்பிடத்திற்குரிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் என்.ஓ.சி.யுடன் விண்ணப்பித்தால், அவர்கள், சம்பந்தப்பட்ட மாநில அரசுக்குக் கடிதம் எழுதி, ஓட்டுநர் உரிமம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மையான தகவல்களா? என்று உறுதி செய்த பின் புதிய உரிமம் வழங்குவார்கள்.







logo