ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்


ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க யார் விண்ணப்பிக்க முடியும்?

✍ காலாவதியான ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர் மட்டுமே ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க முடியும்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க எவ்வகையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?

☞ விண்ணப்பம் - படிவம் - 9

☞ படிவம் -1A - விண்ணப்பதாரர் 50 வயதுக்கு மேல் இருத்தால் மட்டும் இணைக்க வேண்டும்.

☞ எம்.சி.சி. உள்ள மருத்துவ சான்றிதழ்

☞ ஓட்டுநர் உரிமம்

☞ வயதை நிரூபிக்கும் ஆதாரம்

☞ பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் - 2

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க செலுத்த வேண்டிய கட்டணம் :

✇ புத்தக படிவத்திற்கு ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். லேமினேட் அட்டை ரூ.100 + சேவை கட்டணங்கள் ரூ.50 செலுத்த வேண்டும். தாமதமாக புதுப்பிப்பவர்களுக்கு ஒரு ஆண்டுக்கோ அல்லது ஒரு பகுதிக்கோ கூடுதல் கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விண்ணப்பிக்கும் முறைகள் :

✇ வட்டார போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I அவர்களிடம் விண்ணப்பங்களைக் கொடுக்க வேண்டும். விண்ணப்பதாரர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

✇ ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படவேண்டிய நாட்களை கடந்து ஐந்து வருடங்களுக்கு மேல் புதுப்பிக்கப்படாமல் இருந்தால் மீண்டும் புதிதாக ஓட்டுநர் சோதனை நடத்தப்பட்டு ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படும். ஓட்டுநர் உரிமத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கப்படவேண்டிய தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காமல் வாகனத்தை ஓட்டிச்சென்று விபத்து ஏற்பட நேர்ந்தால் சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள்:

✇ ஓட்டுநர் உரிமத்தின் கடைசி தேதி முடிந்து 30 நாட்கள் வரை உரிமம் செல்லுபடியாகும். அதற்குப் பின்னர், உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால் நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கிறதோ, அதே நடவடிக்கை தான் இதற்கும் பொருந்தும்.

✇ ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் வாகனத்துக்கோ, ஓட்டியவருக்கோ அல்லது வாகனத்தால் பாதிக்கப்பட்டவருக்கோ இழப்பீடு பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம்.

ஓட்டுநர் உரிமத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்?

✇ ஓட்டுநர் உரிமம் அதிக பட்சமாக 20 வருடங்களுக்குச் செல்லும். அதாவது அந்த 20 வருடங்கள் உங்கள் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். 50 வயதுக்கு மேல் 5 வருடத்துக்கு ஒரு முறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும்.

✇ ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கும்போது மருத்துவர் உங்களைப் பரிசோதித்து மன நிலை மற்றும் உடல்நிலை வாகனம் ஓட்டுவதற்கு உகந்ததாக இருக்கிறது எனச் சான்றளிக்க வேண்டும். அதேபோல் நீங்களும் என் மன நிலையும் உடல்நிலையும் சரியாக இருக்கிறது என ஒப்புதல் அளிக்க வேண்டும்.







logo