மோட்டார் வாகனங்களின் பதிவு



மோட்டார் வாகனங்களின் பதிவின் அவசியம்:

✇ இருசக்கர வாகனங்கள், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் முழுவதுமாக பாடி கட்டப்பட்ட பிறகே விற்கப்படுகின்றன. அவற்றை எவ்வித மாற்றமும் செய்யாமல் சாலையில் ஓட்டுகிறோம். லாரி, பேருந்து போன்ற வாகனங்கள் பாடி கட்டாத நிலையில் விற்கப்படுகின்றன.

✇ அதனை வாங்குபவர் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைக்கு உட்பட்டு அதற்கான பாடி கட்டிக்கொள்ள வேண்டும். மோட்டார் வாகன சட்டப்படி வாகனத்துக்கு பாடி கட்டியிருப்பதாக பாடி கட்டுவோர் சான்று வழங்குவர். அந்த சான்றுடன் இருப்பிடச் சான்று உள்ளிட்டவற்றையும் சமர்ப்பித்து கனரக வாகனங்களை பதிவு செய்ய வேண்டும்.

வாகனப் பதிவின் கட்டணம் :

✇ இலகு ரக வாகனம், மத்திய ரக வாகனம், கனரக வாகனம் என வாகனங்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. 7 ஆயிரம் கிலோ வரை உள்ளவை இலகு ரக வாகனம். அதற்கு பதிவுக்கட்டணம் ரூ.300 ரூபாய்.

✇ 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கிலோ வரை உள்ள மத்திய ரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.400. 12 ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட கனரக வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.500. இருசக்கர வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் ரூ.30.

சொந்த ஊர் இல்லாத மாவட்டம், மாநிலத்தில் வாகனம் பதிவு செய்யும் வழிமுறைகள் :

✇ வாகனங்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கலாம். அவ்வாறு வாங்கும் இடத்தில் வீடு அல்லது அலுவலக முகவரி இருக்கவேண்டும். அதற்கான சான்று இருந்தால் மட்டுமே வாகனம் வாங்கும் இடத்தில் அவற்றை பதிவு செய்ய முடியும். இல்லாவிட்டால், தற்காலிகமாக பதிவு செய்துகொள்ளுதல் அவசியமாகும்.

✇ பிறகு நிரந்தர, தற்காலிக முகவரி உள்ள பகுதிக்கு வந்து, அந்த எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

வங்கிக் கடன் மூலம் வாங்கும் வாகனங்களுக்கு பதிவுச் சான்று (ஆர்.சி.) :

✇ வாகன உரிமையாளரிடம் மட்டுமே வாகனப் பதிவுச் சான்று வழங்கப்படும். வங்கிக் கடன் மூலம் வாகனம் வாங்கியிருந்தால் அடமானம் என பதிவுச் சான்றில் குறிப்பிடப்பட்டிருக்கும். வங்கிக்கடன் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கி மூலம் நிலுவையில்லாச் சான்று வழங்கப்படும்.

✇ அதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொடுத்து, அடமானம் என்று குறிப்பிட்டிருப்பதை நீக்கம் செய்துகொள்ளலாம். வங்கிக் கடனை சரிவர செலுத்தாத பட்சத்தில், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட பைனான்சியரிடம் பதிவுச்சான்று வழங்கப்படும்.

✇ நாம் ஒரு புது வாகனத்தை வாங்கும்போது எந்தப் பிரச்சனைகளும் வராதபடி, பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் டீலர் நமக்குக் கொடுப்பார். மேலும் நாம் நேரடி உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், பழைய வாகனத்தை வாங்கும் போது எப்படி உரிமையை மாற்றிக்கொள்வது? ஆர்.சி. புத்தகம் இல்லாமல் அதை வாங்கலாமா? என சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும்.

✇ ஒரு வீட்டையோ, காலி மனையையோ விற்பவர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று வாங்குபவரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, விற்பனை செய்ததற்கான பத்திரத்தில் கையெழுத்துப் போடுவதுடன் அவரது வேலை முடிந்துவிடுகிறது. ஆனால், மோட்டார் வாகனச் சட்டப்படி தன் பெயரில் பதிவு செய்யப்பட்ட பழைய கார், பைக் மற்றும் இதர வாகனங்களை விற்கும்போதும், வாங்கும்போதும் நாம் பதிவு அலுவலகத்துக்குச் செல்வதில்லை. அதே சமயம், அந்த விற்பனை பற்றி மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு தகவல் தர வேண்டியது விற்ப்பவர் மற்றும் வாங்குபவரின் முக்கிய கடமையாகும்.

✇ ஒருவர் தனது காரை பதிவு செய்யப்பட்ட அதே மாநிலத்துக்குள் இருப்பவருக்கு விற்பனை செய்திருந்தால், 14 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட்ட நபரின் பெயர் மற்றும் முழு விலாசத்தையும் படிவம் 29ல் பூர்த்தி செய்து, மோட்டார் வாகனப் பதிவு அலுவலகங்களுக்கு அக்னாலெட்ஜ்மென்ட் அட்டையுடன் பதிவுத்தபாலில் அனுப்புதல் வேண்டும். அதன் நகலை நம்மிடமிருந்து வாகனத்தை வாங்கியவருக்கும் அனுப்புதல் வேண்டும். இது விற்பனை செய்பவரின் முக்கியமான கடமையாகும்.

✇ ஒரு வேளை நாம் வெளி மாநிலத்தில் இருப்பவருக்கு வாகனத்தை விற்பனை செய்து இருந்தால், விற்பனை செய்த 45 நாட்களுக்குள் எந்தப் பதிவு அலுவலக எல்லைக்குள் வாகனத்தை வாங்கியவர் இருக்கிறாரோ, அந்த அலுவலகத்துக்கு நாம் தகவல் தரவேண்டியது அவசியம். அப்படி வெளி மாநிலத்தில் விற்பனை செய்யும்போது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட தடை இல்லாச் சான்று (No objection Certificate) அல்லது தடையில்லா சான்றுக்கு மனு செய்து 30 நாட்கள் ஆகியும் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களை வைத்து அனுப்ப வேண்டும்.

✇ வாகனத்தை வாங்கியவர், அவர் குடியிருக்கும் அல்லது வியாபாரம் செய்யும் இடத்தில், எங்கு அந்த வாகனத்தைப் பயன்படுத்துகிறாரோ அங்கு உள்ள மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்தில் பதிவுப் புத்தகம், இன்சூரன்ஸ், அதற்குரிய கட்டணம் ஆகியவற்றுடன் வெளி மாநிலமாக இருப்பின், தடையில்லா சான்று அல்லது அந்தச் சான்றுக்கு மனு செய்து 30 நாட்களுக்குள் கிடைக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களுடன் மனு கொடுத்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு 30 நாட்களுக்குள் மாற்றிக்கொள்வது அவசியமாகும்.

✇ இப்படி வாகனத்தை வாங்குபவரோ, விற்பவரோ தங்கள் கடமைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் செய்யாவிட்டால், மோட்டார் வாகனச் சட்டப்படி அபராதம் செலுத்தக் கடமைப்பட்டவராவர். வாகனத்தை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனத்தை ஓட்டி ஏதாவது விபத்து ஏற்பட்டாலும், அதற்கு இன்சூரன்ஸ் இருந்தாலும் இழப்பீடு தொகை பெற முடியாது.

✇ புதிய உரிமையாளரின் பெயர் ஆர்.சி.புத்தகத்தில் மாற்றப்பட்டதும் அதன் நகலை இன்சூரன்ஸ் கம்பெனியில் கொடுத்து, ஏற்கெனவே பழைய உரிமையாளர் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பாலிசியையும் குறிப்பிட்ட கட்டணம் (டிரான்ஸ்ஃபர் பீஸ்) செலுத்தி அவர் பெயருக்கு மாற்றிவிட்டால் சட்டப்படி எந்தச் சிக்கலும் வராது.

ஒருமுறை பதிவு செய்த வாகனத்தை மறுபதிவு செய்யமுடியுமா?

✇ ஒருமுறை வாகனத்தைப் பதிவுசெய்துவிட்டால், மீண்டும் பதிவுசெய்து புதிய எண் பெற முடியாது. அந்த வாகனத்தின் பதிவுக் காலம் காலாவதியாகும் போது, அதைப் புதுப்பிக்க மட்டும்தான் முடியும். எத்தனை உரிமையாளர்கள் மாறினாலும் மறு பதிவு செய்ய முடியாது. அந்த வாகனம் முழுவதும் பயன்படுத்த முடியாத காலம் வரையிலும் அதற்கு ஒரே பதிவு எண்தான். உரிமையாளரின் பெயர், விலாசம் மட்டுமே மாறலாம்.

✇ இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் அல்லது எந்த மூலைக்குச் சென்றாலும் நமக்கு அதே பதிவு எண்தான். ஆனால், நாம் ஒரு மாநிலத்தில் பதிவு செய்த வாகனத்தை வேறு மாநிலத்தில் 12 மாதங்கள் வரைதான் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் பழைய பதிவு எண்ணுடன் பயன்படுத்த முடியாது. அப்படிப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாகும். நாம் கோவையில் பதிவு செய்த வாகனத்தில் பெங்களூர் சென்று 12 மாதங்களுக்கு மேல் அங்கு பயன்படுத்த முடியாது. அவ்வாறு பயன்படுத்தும்போது கர்நாடகப் பதிவு ரீரெஜிஸ்ட்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும்.

வாகனத்தின் பதிவை மறுக்க முடியுமா?

✇ ஒரு வாகனம் திருடப்பட்டது என்று சந்தேகிக்கக் காரணம் இருந்தாலும், வாகனம் சாலையில் ஓடும்போது இயந்திரக் கோளாறு காரணமாக பிறர் உயிருக்கு ஆபத்து விளைவிக்க வாய்ப்பு இருந்தாலும், மோட்டார் வாகனச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரைமுறைகளுக்குள் அந்த வாகனத்தின் தன்மை, அமைப்பு போன்றவை இல்லை என்றாலும், பதிவுக்கு வரும்போது தேவையான அனைத்து விவரங்களையும் மனுதாரர் தரவில்லை என்றாலும், தவறான தகவல்களை மனுதாரர் கொடுத்திருந்தாலும், வேறு மாநில வாகனம் என்றால் அதன் முந்தைய பதிவு எண் விவரங்கள், சான்றுகள் ஆகியவற்றை தரவில்லை என்றாலும் பதிவு செய்யும் அதிகாரி எழுத்துப்பூர்வமாக, உத்தரவில் காரணங்கள் குறிப்பிட்டு பதிவு செய்ய மறுக்கலாம். இதன் ஒரு நகலை மனுதாரருக்கு அளிக்க வேண்டும்.

வாகன உரிமையாளர் இறந்துவிட்டால் அதனை பயன்படுத்தும் வாரிசுதாரர் செய்யவேண்டியவை :

✇ ஒரு வாகனத்தின் உரிமையாளர் இறந்துவிட்டால், அதனைப் பயன்படுத்தப்போகும் வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட மோட்டார் வாகனப் பதிவு அலுவலகத்துக்கு 30 நாட்களுக்குள் உரிமையாளர் இறந்துபோனது பற்றியும், அதை தான் பயன்படுத்தப் போவதையும் தகவல் கொடுத்துவிட்டு, இறந்து போனவரின் பெயரிலேயே மூன்று மாதங்கள் வரை தொடர்ந்து உபயோகப்படுத்தலாம்.

✇ இந்தக் காலகட்டத்துக்குள் ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், உரிமையாளரின் இறப்புச் சான்று மற்றும் அதற்குரிய கட்டணம் செலுத்தி, படிவம் 31ல் இறந்துபோனவரைப் பற்றிய முழு விவரங்களையும், தற்போது பயன்படுத்துபவர் பெயர், விலாசம் மற்றும் உறவுமுறை ஆகியவற்றையும் குறிப்பிட்டு, இறந்துபோனவரின் வாரிசுதாரர் என்பதற்கான சான்றுகளுடன் மனு கொடுத்து, தங்கள் பெயருக்கு பதிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.







logo