பழைய வாகனங்கள்


பழைய கார் வாங்கும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் :

⚾ மூன்று ஆண்டுகளுக்கு மேலான வண்டிகளை வாங்கும் போது, அதன் பரமாரிப்பு செலவு அதிகமாக இருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

⚾ அதனால் பழைய மார்க்கெட்டில் ஆடம்பர கார்களை தவிர்க்க வேண்டும்.

⚾ உங்களின் தேவையை பொறுத்து என்ன கார் வாங்க வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து செயல்படுங்கள்.

⚾ பெரிய கார்களை வாங்கும் போது டீசல் கார்களை வாங்குவதே நல்லது. ஏனெனில் அதை மறுபடியும் விற்கும் போது நல்ல விலைக்கு விற்கலாம்.

⚾ ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை கிட்டத்தட்ட எல்லா கார் ஷோரூம்களிலும், அதற்கு முந்தைய ஆண்டு மாடல் கார்கள் விற்பனைக்கு கிடைக்கும்.

⚾ பழைய மார்க்கெட்டில் பெரும்பாலும் சிங்கிள் ஓனர் கார்களை வாங்குவதே நல்லது.

⚾ பழைய கார்களை வாங்கும் போது நேரடியாகவே வாடிக்கையாளரை தொடர்பு கொண்டு வாங்குவதே நல்லது.

⚾ சேல்ஸ்மேன்கள் பேசுவதை எல்லாம் கண்முடித்தனமாக நம்பமால் சரியான தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

⚾ சேல்ஸ்மேனின் உதவி இல்லாமல் தனியாரிடம் வாங்கும்போது கண்டிப்பாக, அவரின் வீட்டுக்கு சென்று காரைப் பார்ப்பது தான் நல்லது. அப்போதுதான் நாளை ஏதும் பிரச்சனை என்றாலும், வாடிக்கையாளரை பார்த்துக் கேட்க முடியும்.

⚾ சில நேரங்களில் திருட்டு கார்களை சிலர் இணையத்தளம் மூலம் விற்கிறார்கள். எனவே கவனமுடன் இருக்க வேண்டும்.

⚾ பழைய கார் டீலரிடம் வாங்குவதில் உள்ள ஒரே பயன், அவர்கள் கொடுக்கும் வாரண்டி தான். ஒரு வருடத்திற்குள் எதாவது பிரச்சனை வந்தால் அவர்கள் சர்வீஸ் செய்து தந்துவிடுவார்கள்.

⚾ எப்போதும் பிரச்சனைக்குரிய காரை வாங்குதலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சிறு குறைபாடு இருந்தால், அதை பின்னால் சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்து வாங்கினால் அந்த பிரச்சனை நின்று விடாது. மேலும் நமக்கு செலவினை அதிகப்படுத்தி விடும்.

⚾ பழைய கார்களை வாங்கும் போது, முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒடோ மீட்டர் ரீடிங். பெட்ரோல் கார் என்றால், ஆண்டுக்கு 12,000 கிலோ மீட்டர் வரை ஓட்டியிருக்கலாம். டீசல் கார் என்றால் 15000 கிலோ மீட்டர் வரை ஓட்டியிருக்கலாம்.

⚾ மூன்று ஆண்டுகளான பழைய கார் 50,000 கிலோ மீட்டர்க்கு மேல் ஓடியிருக்கிறது என்றால், அந்த காரை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.

⚾ சர்வீஸ் ஹிஸ்டரி என்பது மிகவும் முக்கியமானதாகும். எப்போதெல்லாம் காரை சர்வீஸ் செய்திருக்கிறார்கள் என்கிற விவரங்களை பார்க்க வேண்டும். சர்வீஸ் ஹிஸ்டரி இல்லாத கார்களை தவிர்ப்பது நல்லது.

⚾ காரின் ஒரிஜினல் டயர் இல்லாமல், வேறு ஏதும் விலை மலிவான டயர்கள் பொருத்தப்பட்டிருக்கிறதா என பார்க்க வேண்டும். டயர்களை மாற்ற வேண்டுமானால், குறைந்தது 15,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

⚾ ரிமோட் கீ என்றால், இரண்டு சாவிகளும் சரியாக வேலை செய்கிறதா என்று பார்க்க வேண்டும். ரிமோட் மூலம் டிக்கியை திறக்க முடிகிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

⚾ இருக்கைகள் மற்றும் சீட் பெல்ட்டுகள் சரியான கண்டிஷனில் இருக்கிறதா என்றும், சீட் கவர்களை அகற்றி பார்த்தல் அவசியம்.

⚾ ரிவர்ஸ் சென்சார் அல்லது கேமரா இருந்தால், அவை சரியான முறையில் இயங்குகிறதா என்று பார்க்க வேண்டும்.

⚾ காரின் கண்ட்ரோல்கள் அனைத்தையும் சரியாக சோதித்து பார்க்க வேண்டும். மியூசிக் சிஸ்டம், யுஎஸ்பி போர்ட், ஆக்ஸ்-இன் ப்ளக் அனைத்தும் ஒழுங்காக வேலை செய்கிறதா என செக் செய்தல் வேண்டும்.

⚾ பேட்டரி, மற்றும் அதன் கேபிள்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

⚾ எந்த காரையும், ஓட்டிப் பார்த்து டெஸ்ட் செய்யாமல் வாங்கவே கூடாது.

⚾ குறைந்தப்பட்சம் பதினைந்து நிமிடங்களாவது நீங்கள் காரை ஓட்டிப் பார்க்க வேண்டும். குண்டும், குழியுமான சாலைகள், நெடுஞ்சாலை, நகர நெருக்கடி மிகுந்த சாலை என எல்லாவிதமான சாலைகளிலும் ஓட்டிப்பார்க்க வேண்டும்.

⚾ நெடுஞ்சாலையில் காரை ஓட்டும்போது, கார் ஸ்டேபிளாக இருக்கிறதா அல்லது அலைபாய்கிறதா என்றும், அதிக வேகத்தில் செல்லும் போது ஸ்டியரிங் கிரிப்பாக இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்.

⚾ பழைய கார்களை வாங்கும் போது மறக்காமல் அதன் ஆர்.சி. புத்தகத்தை வாங்கி நன்கு பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒரிஜினலை சரிபார்ப்பதுதான் நல்லது.

⚾ டீலர் மட்டுமல்லாமல், காரை விற்பவரின் பின்னணியையும் கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. முக்கியமாக வண்டி இன்ஷ்யூர் செய்யப்பட்டிருக்கிறதா, எந்த வகையிலான இன்ஷ்யூரன்ஸ் என நன்கு சோதித்து பார்த்து காரை வாங்க வேண்டும். ஏதோ சின்னதான உராய்வு என்றால் அதற்கு அதிகம் செலவாகாது. ஆனால் ஒரு கதவையே மாற்றும்படியான நிலை என்றால், பல ஆயிரங்கள் அதற்குச் செலவழிக்க வேண்டியிருக்கும்.

⚾ சம்பந்தப்பட்ட சாலைப் போக்குவரத்து அலுவலகத்துக்கு (RTO), சென்று அந்தக் கார் மீது எந்த குற்றப் பத்திரிகையும் இல்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் பலவித பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

⚾ செகண்ட் ஹேண்ட் காரை வாங்கினால் எந்த நாளில், எத்தனை மணிக்கு வாங்கிக் கொண்டேன் என்பதோடு இந்த நேரம், இந்த தேதிக்கு முன்னால் அந்தக் கார் சம்பந்தப்பட்ட எந்த விஷயத்திற்கும் அதன் பழைய உரிமையாளர்தான் பொறுப்பு என்றும் எழுதி இருதரப்பினரும் கையெழுத்திட வேண்டும்.

⚾ அந்தக் கார்மீது கடன் வாங்கியிருந்தால் அந்த விவரம் ஆர்.சி. புத்தகத்தில் இருக்கும். ஆர்.சி. புத்தகம் இல்லாமலே கூட சில அடமானங்கள் நடப்பது உண்டு. எனவே சிரமம் பார்க்காமல் ஒருமுறை RTO அலுவலகத்துக்குச் சென்று இந்த அடமானம் குறித்த விவரங்களை உறுதி செய்து கொள்ளுதல் பாதுகாப்பனதாகும்.

⚾ உங்கள் முதுகின் நலத்திற்கு தகுந்த இருக்கை கொண்ட காரைத் தேர்ந்தெடுப்பது நல்லது.

⚾ நீங்கள் ஏதாவது நிறுவனத்தில் கடன் பெற்று கார் வாங்குகிறீர்கள் என்றால், கீழே உள்ள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும். வேலை பார்ப்பவர் என்றால் கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மெண்டும், கடந்த இரண்டு மூன்று மாதங்களுக்கான சம்பள பில்லும் தேவைப்படும். பிசினஸ் செய்பவர் என்றால் கடந்த சில வருடங்களுக்கான உங்கள் வருமான வரி ரிட்டனைக் காட்ட வேண்டியிருக்கும். உங்கள் முகவரி தொடர்பான அடையாளச் சான்று தேவைப்படும். நிதி நிறுவனம் கேட்பதில்லை என்றால் கூட, காரை வாங்கும் போது ஓட்டுநர் உரிமம் உங்கள் பெயரில் இருத்தல் வேண்டும். இன்ஷ்யூரன்ஸ் தேதி காலாவதியாகாமல் இருக்கிறதா போன்ற விவரங்களை அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்ய வேண்டிய செயல்கள் மற்றும் செய்யக் கூடாத செயல்கள் :

மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்ய வேண்டிய செயல்கள் :

✇ இது போன்ற பாலிஸிகளை யார் மூலமும் வாங்கிக் கொள்ளலாம் என்றும், உங்கள் வாகன டீலர் மூலமாக மட்டுமே பெற வேண்டும் என்று எவ்வித நிபந்தனையும் கிடையாது என்றும் அறிந்து வைத்துக் கொள்ளுதல் அவசியமாகும்.

✇ உங்கள் வாகன டீலர் மூலம் இன்ஷ்யூரன்ஸுக்கு ஏற்பாடு செய்திருந்தாலும், விண்ணப்பப் படிவத்தை நீங்களே நிரப்ப வேண்டும்.

✇ விண்ணப்பப் படிவத்தை மிகவும் கவனமாகவும், முழுமையாகவும், உண்மையான தகவல்களின் அடிப்படையிலும் நிரப்ப வேண்டும்.

✇ பரஸ்பர ஒப்புதலுக்குப் பின் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தின் நகல் ஒன்றை பத்திரமாக ஆவணப்படுத்திக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும்.

✇ பாலிஸி பற்றிய தகவல் தொகுப்பேட்டை கவனமாகப் படித்துப் பார்த்து, அந்த இன்சூரன்ஸுக்குள் அடங்கக்கூடியவை எவை, அடங்காதவை எவை என்பது பற்றி தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

✇ இதில் கூடுதலாகப் பெறக்கூடிய பாதுகாப்பு பற்றிய தகவல்களை கேட்டு அறிந்து கொண்டு, அவற்றில் எது உங்களுக்கு தேவை என்பதை தேர்வு செய்யவேண்டும்.

✇ ஆர்சி புத்தகம், பெர்மிட் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற ஆவணங்களை சரிபார்ப்புக்காக இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

✇ இந்த ஆவணங்கள் அனைத்தையும் அவ்வப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து புதுப்பித்து வைத்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.

மோட்டார் இன்சூரன்ஸ் வாங்கும்போது செய்யக்கூடாத செயல்கள் :

⚾ உங்கள் விண்ணப்ப படிவத்தை நிரப்ப வேறு யாரையும் அனுமதிக்க கூடாது, நீங்களே அந்த படிவத்தை நிரப்புதல் வேண்டும்.

⚾ படிவத்தில் உள்ள எல்லா கட்டத்தையும் சரியான தகவலினால் நிரப்ப வேண்டும், நிரப்பாமல் வெறுமையாக விட கூடாது.

⚾ உங்கள் பாலிஸியை இடைவெளி விடாது உரிய நேரத்தில் புதுப்பித்து வைத்துக்கொள்ள மறந்துவிடாதீர்கள். ஏற்கெனவே லைசென்ஸ் எடுக்கப்பட்டு, உபயோகப்படுத்தப்பட்ட காரை வாங்கும் போது, சரியான நடைமுறை என்ன என்பது பற்றி கேட்டுத் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

⚾ நீங்கள் இன்சூர் செய்யும் வாகனத்தின் உபயோகத்தைப் பற்றிய பொய்யான தகவல்களை கொடுப்பது மிகவும் தவறான செயலாகும், ஆகவே உண்மையான தகவல்களை கொடுத்தல் பாதுகாப்பானதாகும்.

உங்கள் வாகனம் தொலைந்து போனால் செய்யவேண்டியவையும், தொலைந்து போன வாகனத்திற்கு காப்பீடு பெறும் வழிமுறைகளும் :

✇ வாகனம் தொலைந்துபோனால் அது குறித்து உடனடியாக இன்சூரன்ஸ் செய்த நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அத்துடன் காவல்துறையில் புகார் பதிவு செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை இன்சூரன்ஸ் நிறுவன பிரதிநிதிகள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். இது தொடர்பான அனைத்து நடைமுறைகளையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.

✇ முதலில் வாகனம் ஒட்டு மொத்தமாக இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்பது பரிசீலிக்கப்படும். அதாவது வாகனம் மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதா என்று ஆராயப்படும். அதாவது விபத்தில் வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டால் அதற்கு இழப்பீடு, தீ விபத்து அல்லது வாகனம் தொலைந்து போவது, இயற்கை சீற்றங்களால் வாகனத்துக்கு ஏற்படும் சேதத்துக்கு இழப்பீடு அளிக்க வகை செய்வதாகும்.

எப்ஐஆர் :

⚾ இன்சூரன்ஸ் செய்தவர் வாகனம் தொலைந்தது தொடர்பாக காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) நகலை உடனடியாகப் பெற வேண்டும்.

இழப்பீட்டு விண்ணப்பம் :

⚾ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி இழப்பீட்டு விண்ணப்பத்தைக் கேட்டுப் பெற்று, அதில் வாகன இன்சூரன்ஸ் எண், வாகனம் பற்றிய விவரம், வாகனம் தொலைந்துபோன நேரம், தேதி உள்ளிட்ட விவரங்களைப் பூர்த்திசெய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக இழப்பீடு கோரினாலும் அந்த விவரத்தையும் தெரிவிக்க வேண்டும்.

இழப்பீட்டு விண்ணப்பத்துடன் சேர்க்க வேண்டிய ஆவணங்கள் :

✇ முதலில் பூர்த்தி செய்த இழப்பீடு விண்ணப்பத்தில் உரிய இடத்தில் கையொப்பமிட்டு அத்துடன் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்சி) நகல், வாகன ஓட்டுனர் உரிமத்தின் நகல், காப்பீட்டு ஆவணத்தின் முதல் இரண்டு பக்கங்களின் நகல், காவல்துறை அளித்த எப்ஐஆர் மற்றும் வாகனம் திருட்டு போனது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆர்டிஓ-வுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

இழப்பீட்டு தொகை :

⚾ காவல்துறை வாகனத்தை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ் அளித்த பிறகு வாகனத்துக்கு இழப்பீட்டு தொகை அளிக்கும் பணியை சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் தொடங்கும். காணாமல் போன வாகனத்தின் ஆர்சி-யில் அந்த காப்பீட்டு நிறுவனத்துக்கு பெயர் மாற்றம் செய்து தர வேண்டும். பின்னர் வாகனத்தின் டூப்ளிகேட் சாவி, வாகனம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காப்பீட்டு நிறுவனத்திடம் அளிக்க வேண்டும்.

✇ வாகனம் காப்பீடு செய்யப்பட்ட தொகை, வாகனத்தின் மதிப்பை கணக்கிட்டு அதனடிப்படையில் மதிப்பீட்டாளர் இழப்பீட்டு தொகையை நிர்ணயிப்பார். இதையடுத்து அடுத்த 7 அலுவலக நாள்களில் இழப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்.

⚾ மேலும் வாகனத்தின் டூப்ளிகேட் ஆர்சி புத்தகத்தை சம்பந்தப்பட்ட ஆர்டிஓ அலுவலகத்திலிருந்து உடனடியாகப் பெற வேண்டும்.

✇ வாகனம் வங்கிக்கடன் மூலம் வாங்கப்பட்டிருந்தால், இன்சூரன்ஸ் நிறுவனம் அளிக்கும் இழப்பீட்டுத் தொகை சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்துக்குத்தான் அளிக்கப்படும். இழப்பீட்டுத் தொகையை விட கூடுதலாக கடன் செலுத்த வேண்டியிருந்தால் அந்தத் தொகையை சம்பந்தப்பட்டவர்தான் செலுத்த வேண்டும்.







logo