விபத்துக் காப்பீடு


👭 காப்பீடு அல்லது காப்புறுதி (insurance) என்பது சார்ந்திருப்போர் இழப்பின் பாதிப்பு இடர்பாட்டினைக் கடப்பதற்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் இடர் மேலாண்மை வடிவமாகும். பெரிய அளவிலான அதிர்ச்சியளிக்கும் இழப்பிற்கான வாய்ப்பை தவிர்க்கும் வகையில் ஒரு சிறிய உத்தரவாதம் மிக்க இழப்பாக ப்ரீமியத்தைப் பெற்று‚ ஒரு தரப்பிலிருந்து மற்றொரு தரப்பிற்கு இழப்பு இடர்பாட்டிற்கு சமமான மாற்றினை வழங்குவதே காப்பீடு ஆகும். காப்பீட்டை விற்கும் நிறுவனம் காப்பீடு வழங்குவோர் என்றும், காப்பீடுதாரர் அல்லது பாலிசிதாரர் என்று காப்பீட்டை பெற்ற நபரை அழைக்கின்றோம். ப்ரீமியம் என்றழைக்கப்படும் காப்பீட்டு பாதுகாப்பின் குறிப்பிட்டத் தொகையை நிர்ணயிக்கும் காரணி காப்பீடு விகிதாச்சாரம் ஆகும். கற்றல் மற்றும் வழக்கம் பிரிவில்‚ இடர்பாட்டினை மதிப்பிடுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் வழக்கமான இடர் மேலாண்மை ஒரு தனிப்பிரிவாக உருவாகியுள்ளது.

காப்பீட்டின் வகைகள்:

👭 அளவிடக்கூடிய எந்த ஒரு அசம்பாவிதமும் காப்பீடு செய்ய தகுதி பெறுகிறது. குறிப்பிடும் வகையில் உள்ள எந்த அசம்பாவிதம் இழப்பீடு பெரும் நிலையை எய்துதல், பெரில்ஸ் எனப்படும். எந்த பெரில்ஸ்கள் பாலிசியில் சேர்க்கப்படவேண்டும், எவை சேர்க்கப்படமாட்டாது என காப்பீட்டு பாலிசியில் விரிவாக இருக்கும். உதாரணமாக வகானக் காப்பீடு, மிகச்சரியாக சொத்து சிரமங்கள், மற்றும் சட்ட ரீதியான சிரமங்களையும் உள்ளடக்கியுள்ளது.

விபத்துக் காப்பீடு :

👭 விபத்துக் காப்பீடு என்பது ஒருவர் விபத்தினால் இறந்தாலோ அல்லது ஊனம் அடைந்தாலோ ஏற்படும் பணக் கஷ்டத்தை ஈடு செய்வதாக இருக்கிறது. 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் வரை இந்த விபத்துக் காப்பீட்டை எடுத்துக்கொள்ளமுடியும். இந்த பாலிசியை பொதுக் காப்பீடு நிறுவனங்களில் எடுத்துக்கொள்ளலாம். சில தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன.

தேவையானவை:

⚾ புகைப்படம்.

⚾ புகைப்பட அடையாளத்துக்கான ஆதாரம்.

⚾ வீட்டு முகவரி மற்றும் அலுவலக முகவரிக்கான ஆதாரம்.

⚾ விண்ணப்பப்படிவம்.

தனிநபர் விபத்துக் காப்பீடு :

👭 வேலைக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். எந்தவொரு குறிப்பிடத்தக்க சொத்துடனும் இணைந்திராத விபத்துகளிலிருந்து விபத்துக்காப்பீடு காப்புறுதியளிக்கிறது.

👭 மூன்றாம் நபர்களின் சமூக விரோத செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் இழப்புகளிலிருந்து பாதுகாப்பு அளிப்பது குற்றவியல் காப்பீடு ஆகும். உதாரணத்திற்கு திருட்டு அல்லது ஏமாற்றுதல் போன்றவைகளின் காரணமாக ஏற்படும் இழப்பிலிருந்து குற்றவியல் காப்பீடு காப்புறுதியளிக்கும்.

👭 நாட்டில் புரட்சி அல்லது பிற அரசியல் நிலைகள் காரணமாக ஏற்படும் இழப்பு இடர் பாதிப்பிலிருந்து பாதுகாப்பளிக்கும் அரசியல் இடர்பாடு காப்பீடும் ஒரு வகையான விபத்துக் காப்பீடே ஆகும்.

பாலிசியை எடுப்பதற்கு முன்பு கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள் :

1. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது ஒருவருக்கு விபத்து ஏற்படும்போது அவரால் பழையபடி இயங்க முடியாமல் போனால் அல்லது எதிர்பாராத வகையில் மரணமடைந்தால் இழப்பீடு தரக்கூடிய ஒரு பாலிசி ஆகும். இந்தக் காப்பீடானது ஒருவரது குடும்பத்தின் பாதுகாப்பு கருதி செய்யப்படும் தவிர்க்க முடியாத ஒரு ஏற்பாடாகவே கருதப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் நிறைந்த இந்த உலகில் கட்டாயம் எடுக்க வேண்டிய காப்பீடுதான் இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசி. இந்த பாலிசியில் நிரந்தர, தற்காலிக ஊனங்களுக்கான இழப்பீடு கவர் ஆகிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.

2. இந்தக் காப்பீடு எடுக்கும்போது பீரிமியம் தொகை எவ்வளவு என்பதை மட்டும் கவனிக்காமல் இதில் கிடைக்கும் கவரேஜ் தொகை எவ்வளவு என்பதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில், பிரீமியம் தொகையை மட்டும் கவனித்தால், பெரிய அளவில் இழப்பு ஏற்படும்போது போதிய கவரேஜ் தொகை கிடைக்காமல் போகலாம். அதனால் அந்த பாலிசி எடுத்தும் பயனில்லாத சூழல் உருவாகும்.

3. இந்த பாலிசி எடுத்தபின், ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு இறந்தால்தான் மொத்த இழப்பீடும் கிடைக்கும் என்பதில்லை. விபத்துக்குள்ளானவரின் உடலின் மொத்த பாகமும் நிரந்தரமாகச் செயல்பட முடியாமல் போனாலும், அவருக்குக் கிடைக்க வேண்டிய மொத்த இழப்பீடும் கிடைக்கும்.

4. ஒருவர் விபத்து காரணமாக உடலில் ஒரு பகுதியையோ அல்லது சில பாகங்களையோ நிரந்தரமாக இழக்கிறார் எனில், அதற்கான இழப்பீட்டுத் தொகையை இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கிவிடும். உதாரணமாக, ஒரு காலில் தொடைக்கு மேல் இழக்கும்பட்சத்தில் 70 சதவிகித இழப்பீடு கிடைக்கும். முழங்காலுக்கு கீழே இழக்கும்பட்சத்தில் 60 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு கண் மட்டுமே போனால், 50 சதவிகித இழப்பீடு கிடைக்கும். ஒரு காது மட்டும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 30 சதவிகிதமும் இரண்டு காதுகளும் கேட்கக்கூடிய சக்தியை இழந்தால் 75 சதவிகித இழப்பீடும் கிடைக்கும். ஆக, இழப்பின் தன்மை மற்றும் பாதிப்பைப் பொறுத்து இழப்பீடு தரப்படும்.

5. ஒரு சிலருக்கு விபத்து காரணமான இழப்பு என்பது தற்காலிகமாக முழுமையாகச் செயல்பட முடியாதபடி (Temporary total disability) இருக்கும். அதாவது, ஒருவரால் பணியிடத்துக்கோ அல்லது மற்ற இடங்களுக்கோ குறிப்பிட்ட காலத்துக்கு நகர முடியாமல் இருப்பதற்கு இந்தக் காப்பீட்டின் மூலம் க்ளெய்ம் (Claim) கிடைக்கும். இது மாதாந்திர அல்லது வாராந்திர தொகையாக அளிக்கப்படும்.

6. இந்தக் காப்பீட்டின் மூலம் விபத்துக்குள்ளான ஒருவரது குழந்தைகளுக்குப் படிப்புக்கான போனஸ் தொகையையும் பெற முடியும். 19 வயதுக்கு உட்பட்ட இரண்டு குழந்தைகள் அங்கீகரிக்கப்பட்ட படிப்பைப் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 5,000 ரூபாய் வரை போனஸ் தொகையாக அளிக்கப்படும். அதேபோல், விபத்து ஏற்பட்ட மூன்று, நான்கு நாட்களுக்கு செய்யவேண்டிய தினப்படி செலவுகளுக்கும் இந்தக் காப்பீட்டு பாலிசியின் மூலம் குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

7. இந்தக் காப்பீடு எடுத்து ஒரு வருடம் வரை எந்தவித க்ளெய்மும் பெறவில்லை எனில், இந்தக் காப்பீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகையில் 5% போனஸாக அளிக்கப்படும். காப்பீட்டுத் தொகையில் 50% வரை அதிகரிக்கும் பாலிசிகளும் உள்ளன.

8. தனிநபர் விபத்துக் காப்பீடு என்பது அனைவருக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு பாலிசி. இது ஆயுள் காப்பீட்டுக்கும், டேர்ம் இன்ஷூரன்ஸுக்கும் இடையேயான இணைப்பாக இருக்கும். இதன் பிரீமியம், செய்யும் தொழிலைப் பொறுத்து மாறுபடும்.

9. இந்தக் காப்பீட்டில் க்ளெய்ம் செய்யும்போது எந்த மாதிரியான இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதை சரியாகக் குறிப்பிட்டிருந்தால்தான் அதற்கான இழப்பீடு காலதாமதம் இல்லாமல் கிடைக்கும்.

10. எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளும் அதேநேரத்தில், எந்தமாதிரியான விபத்துகளுக்கு க்ளெய்ம் கிடைக்காது என்பதையும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, தானாகவே ஏற்படுத்திக் கொண்ட விபத்து, தற்கொலை, போர் மூலம் ஏற்பட்ட விபத்து, ரேஸ்களில் கலந்துகொள்வதினால் ஏற்படும் விபத்து ஆகியவற்றுக்கு இந்த காப்பீட்டின் மூலம் எந்தவித இழப்பீடும் கிடைக்காது.

எப்படி எடுப்பது?

👭 இந்த பாலிசியை எடுக்க விரும்புகிறவர்கள் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு சென்று அவர்கள் தரும் ‘புரபோஸல் ஃபார்ம்’ என்னும் படிவத்தை வாங்கி அதில் கேட்டிருக்கும் விவரத்தை உண்மையாக பூர்த்திசெய்து கொடுக்க வேண்டும்.

👭 ஒருவரின் சம்பளத்திலிருந்து அதிகபட்சம் 60 மடங்கு பாலிசி கவரேஜ் கிடைக்கும். அவரவர் விருப்பத்திற்கேற்ப தேவைப்படுகிற அளவுக்கு இந்த பாலிசியை எடுத்துக் கொள்ளலாம்.

👭 அவரவர்களின் சம்பளத்திற்கேற்ப கிடைக்கும் காப்பீட்டுத் தொகை மாறுபடும். ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு வருட பிரீமியம் 60 ரூபாய் மட்டுமே. குறைந்தபட்சம் ஒருவர் 25,000 ரூபாய் வரைக்கும் இன்ஷூரன்ஸ் எடுத்துக் கொள்ள முடியும். இதற்கான வருட பிரீமியம் வெறும் 15 ரூபாய்.

👭 பிரீமியங்களை காசோலைகளாகவோ, பணமாகவோ பாலிசி எடுத்த அலுவலகத்திற்கு நேரில் வந்து செலுத்த வேண்டும். இன்னும் சில மாதங்களில் தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கான பிரீமியத்தை இணையதளம் வழியாக கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

👭 ஒரு வருடத்திலிருந்து ஐந்து வருடம் வரை இந்த காப்பீட்டு பாலிசியை எடுத்துக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் அதிக ஆண்டுகள் கட்டினால் பிரீமியம் குறையும்.

எதற்கெல்லாம் இழப்பீடு கிடைக்கும்?

👭 வாகன விபத்தில் இறக்க நேரிட்டால் இழப்பீடு கிடைக்கும்.

👭 சாலையில் நடந்து போகும்போது வாகனம் மோதி இறக்க நேரிட்டாலும் இழப்பீடு கிடைக்கும்.

👭 வீட்டில் இருக்கும்போது திடீரென வீடு இடிந்து விழுந்து இறக்க நேரிட்டாலும் இழப்பீடு கிடைக்கும் அல்லது உடல் உறுப்புகளின் இழப்புக்கு ஏற்ப இழப்பீடு கிடைக்கும்.

👭 விபத்தினால் ஏற்பட்ட தற்காலிக ஊனத்தின் காரணமாக பாலிசிதாரரால் அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் போனால் மாதம் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கிடைக்கும்.

யார், யாருக்கெல்லாம் எடுக்கலாம்?

👭 நிறுவனம் அவர்களின் ஊழியர்களுக்கு தனிநபர் விபத்துக் காப்பீட்டு பாலிசியை எடுக்கலாம்.

👭 ஒரு கணவன் தனது மனைவிக்கும், தனது குழந்தைகளுக்கும் இந்த பாலிசியை எடுக்கலாம்.

👭 ஒரு மனைவி, தனது கணவனுக்கும், குழந்தைகளுக்கும் எடுக்கலாம்.

👭 பிள்ளைகள் பெற்றோருக்கு எடுக்கலாம். ஆனால், பெற்றோர்கள் அவர்களை சார்ந்திருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே எடுக்கமுடியும். தனியாகச் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தால், அவர்களாகத்தான் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

இழப்பீடு கிடைக்காத விஷயங்கள்..!

⚾ மது அருந்திவிட்டு வண்டி ஓட்டும்போது ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு கிடைக்காது (ஊனம் மற்றும் மரணம் எதுவாக இருந்தாலும்).

⚾ இயற்கையான மரணம்.

⚾ தற்கொலை அல்லது வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திக்கொள்ளுதல்.

⚾ கொலை.

⚾ குழந்தை பிறப்பின்போது ஏற்படும் மரணம்.

⚾ கருவுற்றிருக்கும்போது உண்டாகும் மரணம்.

எவ்வளவு இழப்பீடு?

👭 விபத்தால் இறப்பு நேரிட்டால் 100% இழப்பீடாக கிடைக்கும்.

👭 இரு கண்கள் அல்லது இரு கை அல்லது இரு கால்கள் இழக்க நேரிட்டால் 100% இழப்பீடு கிடைக்கும்.

👭 இரு கண் பார்வை, இரு கை அல்லது கால்கள், ஒரு கண் மற்றும் ஒரு கால் அல்லது ஒரு கண் மற்றும் ஒரு கை இழக்க நேரிட்டால் 100% இழப்பீடு கிடைக்கும்.

👭 ஒரு கண் அல்லது ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தால் 50% இழப்பீடு கிடைக்கும். முற்றிலும் நிரந்தர ஊனம் அடைந்தால் 100% இழப்பீடு கிடைக்கும்.

பிரீமியம் விவரம்:

⚾ 25,000 ரூபாய் கவரேஜுக்கு 15 ரூபாய் வருட பிரீமியம்.

⚾ ஒரு லட்சம் ரூபாய் கவரேஜுக்கு வருடம் 60 ரூபாய் பிரீமியம்.

⚾ கவரேஜ் மற்றும் வருடம் அதிகமாக, அதிகமாக பிரீமியம் குறையும் என்பது சாதகமான விஷயம். தன்னுடைய வருமானத்தின் அடிப்படையில் ஒருவருக்கு அதிகபட்சம் 60 மடங்கு பாலிசி கவரேஜ் கிடைக்கும். இது நிறுவனங்களுக்கு நிறுவனம் மாறுபடும்.

கிளைம் செய்யும்போது சமர்ப்பிக்க வேண்டியவை:

👭 கிளைம் செய்யும்போது கிளைம் ஃபார்மை பூர்த்திசெய்து தர வேண்டும். கவரேஜ் அதிகம் கிடைக்கும் என்பதால் பொய்யான தகவலை சொல்லக் கூடாது.

👭 பாலிசிதாரருக்கு விபத்து அல்லது விபத்தினால் இறப்பு ஏற்பட்டால், அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனடியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்த அலுவலகத்திற்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

👭 கிளைம் செய்யும்போது கிளைம் படிவத்துடன் ஊனத்தை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ், காவல்துறை சான்றிதழ், அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் பற்றிய விவரம், நிரந்தர குறைபாடு சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து இன்ஷூரன்ஸ் எடுத்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இத்துடன் வேலை செய்யும் அலுவலகத்திலிருந்தும் விடுப்பு சான்றிதழ்களை சமர்ப்பிப்பது அவசியம்.

👭 விபத்தினால் இறப்பு ஏற்பட்டு அதற்காக கிளைம் செய்வதாக இருந்தால், கிளைம் படிவத்துடன் பிரேத பரிசோதனை சான்றிதழ், காவல் துறை சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

👭 நீங்கள் சமர்ப்பித்த விவரங்களை சரிபார்க்க இன்ஷூரன்ஸ் அலுவலகத்தில் இருந்து ஆட்கள் வருவார்கள். சான்றிதழ்களில் உள்ள விவரங்கள் பொய்யானவை என்று தெரிந்தால், கிளைம் தொகை கிடைக்காது. எனவே, உண்மையான தகவல்களை மட்டுமே பூர்த்தி செய்து கொடுப்பது நல்லது.

அரசின் தற்போதைய காப்பீட்டுத் திட்டங்கள் :

👭 குறைந்த பிரிமியத்தில் பலன் அளிக்கக்கூடிய ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா ஆகிய காப்பீட்டு திட்டங்கள் 2015-16 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், குறைந்த வருவாய் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் இரண்டு புதிய காப்பீடு திட்டங்களை நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்தார்.

👭 சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் - ரூ.2 லட்சத்துக்கான விபத்து காப்பீடு வழங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு ரூ.12 பிரிமியம் தொகை செலுத்தினால் போதுமானதாகும். இந்த காப்பீடு எடுத்தவர் விபத்தில் மரணம் அடைந்தால் அவரது குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.

👭 பிரதமர் ஜீவன் ஜோதி பீமா யோஜனா ஆயுள் காப்பீடு திட்டம் - இதற்கு ஆண்டுக்கு ரூ.330 பிரிமியம் செலுத்தினால் போதும். ரூ.2 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும். ஆனால் இதில் 18 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே சேர முடியும். இந்த திட்டங்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளன.

👭 ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காப்பீட்டை ஒரு ரூபாய்க்கும் குறைவான பிரிமியத்தில் வழங்குகிறது ஐ.ஆர்.சி.டி.சி.

சலுகைகள் உண்டா?

👭 ஒரு வருட பாலிசி காலம் முடிந்து 30 நாட்களுக்குள் புதுப்பித்துக் கொண்டால் அடுத்த வருட காப்பீடுத் தொகையில் 5% போனஸ் சேர்த்து வழங்கப்படும். இதேபோல் அடுத்த ஆண்டும் 30 நாட்களுக்குள் புதுப்பித்துக் கொண்டால் 10%, அதற்கு அடுத்த ஆண்டு 15% என அதிகபட்சம் 50% வரை போனஸ் கிடைக்கும்.

கட்டாய பாலிசி :

👭 டூ வீலர் ஓட்டத் தெரிந்த, தெரியாதவர்கள் முதல் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டுகிற அனைவரும் இந்த தனிநபர் விபத்துக் காப்பீடு பாலிசியைக் கட்டாயம் எடுக்க வேண்டும். விபத்துகளினால் ஏற்படும் பணக் கஷ்டங்களை ஈடு செய்வதே இந்த தனிநபர் விபத்துக் காப்பீட்டின் நோக்கமாகும். 18 வயது முதல் 70 வயது உள்ளவர்கள் இந்த விபத்துக் காப்பீட்டை எடுத்துக் கொள்ள முடியும்.







logo