சாலை போக்குவரத்து


🏇 போக்குவரத்தானது முதலில் குதிரை அல்லது காளையின் மூலம் மனிதர்களால் நடைபெற்றது. பின்னர் நாகரீக வளர்ச்சியின் காரணமாக படிப்படியாக உயர்ந்து, வாகனங்கள் மூலம் நடைபெறுகின்றது. சாலை போக்குவரத்து என்பது பயணிகள் அல்லது பொருட்கள் சாலையில் இடம்பெயர்த்தலைக் குறிக்கின்றது.

நவீன சாலைகள் :

✇ நவீன சாலைகள் என்பது பொதுவாக கற்காரை அல்லது கான்கிரீட் மூலம் உருவாக்கப்படுகிறது. கான்கிரீட் சாலை மிகவும் திடமானதாக இருக்கும். எனவே இதனால் அதிகமான சுமைகளை தாங்க முடிகிறது. ஆனால், இந்த வகை சாலைகள் மிகவும் விலையுயர்ந்ததாகவும், கவனமாக தயாரிக்கப்பட்ட துணை அடித்தளமும் தேவைப்படுவதால், முக்கியச் சாலைகள் மட்டுமே கான்கிரீட்டால் கட்டப்படுகின்றன. மேலும் மற்ற சாலைகள் கற்காரை மூலம் அமைக்கப்படுகின்றது.

சாலைப் போக்குவரத்து :

✇ தமிழ்நாட்டில் ஏப்ரல் 1946ம் ஆண்டில் மாநில அரசால் தனியாக நெடுஞ்சாலைகள் துறை நிறுவப்பட்டது. இது அக்டோபர் 30 தேதி, 2008ம் ஆண்டு முதல் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை என பெயரிடப்பட்டுள்ளது. இத்துறை தமிழ்நாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மற்றும் பிற முதன்மை மாவட்டச் சாலைகளை கட்டமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பேற்கிறது.

✇ சாலைகட்டமைப்பு மற்றும் பராமரிப்புத் துறையில் ஏழு பிரிவுகள் இயங்குகின்றன : அவை
☞ தேசிய நெடுஞ்சாலைகள் பிரிவு
☞ கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பிரிவு
☞ நாபார்டு மற்றும் ஊரகச் சாலைகள் பிரிவு
☞ திட்டப்பணி பிரிவு, மெட்ரோ பிரிவு
☞ தமிழ்நாடு சாலைத்துறை திட்டப்பணி பிரிவு
☞ புலனாய்வு மற்றும் வடிவமைப்புப் பிரிவு ஆகியவை ஆகும்.
☞ இந்தப் பிரிவுகள் மாநிலத்தின் 31 மாவட்டங்களிலும் 120 கோட்டங்களுடனும் 450 உட்கோட்டங்களுடனும் பரவி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள்

☢ தமிழ்நாட்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை, மேம்படுத்துவதற்காகவும், பராமரிப்பதற்காகவும் புதுப்பிப்பதற்காகவும் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவு 1971ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள 25 தேசிய நெடுஞ்சாலைகளில், 12 நெடுஞ்சாலைகள் தமிழ்நாட்டிற்குள்ளேயே அமைந்திருக்கின்றன.

தமிழ் நாட்டில் உள்ள 25 தேசிய நெடுஞ்சாலைகள் :

☣ NH 4, NH 5, NH 7, NH 7A, NH 45, NH 45A, NH 45B, NH 45C, NH 46, NH 47, NH 47B, NH 49, NH 66, NH 67, NH 68, NH 205, NH 207, NH 208, NH 209, NH 210, NH 219, NH 220, NH 226, NH 227, NH 234 போன்றவை தமிழ் நாட்டில் உள்ள 25 தேசிய நெடுஞ்சாலைகளாகும்.

☣ இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகிறது. இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள் ஆகும். இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 7 (NH7) கருதப்படுகிறது. இதன் நீளம் 2369 கி.மீ., ஆகும். இது இந்தியாவின் வடக்கே உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியில் ஆரம்பமாகி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைகிறது. மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.

மாநில நெடுஞ்சாலைகள் :

☢ மாவட்ட தலைநகரங்களையும், முக்கிய நகரங்களையும் இணைப்பதற்காக கட்டமைக்கப்படும் சாலைகளும், மாநிலத்தின் உள்ளுர் அண்டை மாநிலங்களில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளுடன் இணைக்கும் சாலைகளும் மாநில நெடுஞ்சாலைகள் என அழைக்கப்படுகின்றது.
கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பிரிவு, சாலை கட்டமைப்பு, பராமரிப்புப் பணிகளுக்கு பொறுப்பேற்கிறது. இது மட்டுமல்லாமல் இப்பிரிவு முதன்மை மாவட்டச் சாலைகளுக்கும் (MDR), பிற மாவட்டச் சாலைகளுக்கும் (ODR) பொறுப்பேற்கிறது.

☢ SH4, SH6, SH9, SH10, SH22, SH49, SH58, SH68, SH134, SH156 போன்றவை மாநில நெடுஞ்சாலைகள் ஆகும்.

பிற சாலைகள் :

☣ இந்த வகைப்பாட்டில் முதன்மை மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள் (ODR), ஊரக மற்றும் கரும்புச்சாலைகள், கிழக்குக் கடற்கரைச் சாலை, இராஜீவ் காந்தி சாலை / தகவல் தொழிற்நுட்ப விரைவுச்சாலை, எண்ணூர்-மணலி சாலை மேம்பாட்டுத் திட்டம் (EMRIP), சென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை மற்றும் வெளி வட்டச் சாலைத் திட்டம் போன்ற சிறப்புச் சாலைகள் உள்ளடங்கும். இந்தச் சாலைகள் ஒரு மாவட்டத்தினுள் உள்ள தயாரிப்பு மற்றும் சந்தைகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துகிறது. மேலும் மாவட்டத் தலைநகரையும் வட்டத் தலைநகரங்களையும் இணைக்கின்றன. கிழக்குக் கடற்கரைச் சாலை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தால் (TNRDC) கட்டப்பட்ட முதல் சாலை ஆகும். இது 2002-இல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

சாலை போக்குவரத்து பாதுகாப்பு :

☢ சாலை போக்குவரத்து பாதுகாப்பு என்பது சாலையைப் பயன்படுத்தும் ஒரு நபர் பலியாவதையோ அல்லது கடுமையாக காயப்படுவதையோ தடுக்கும் முறைகள் மற்றும் நடவடிக்கைகளை குறிப்பதாகும். பாதசாரிகள், மிதிவண்டி ஓட்டுநர்கள், மோட்டார் வாகன ஓட்டுநர்கள் மற்றும் அதன் பயணிகள் ஆகியோர் சாலையின் பயனாளர்கள் ஆவர். தற்கால பாதுகாப்பு உத்திகள் மனிதனால் தவறுகள் நடக்கக்கூடும் என்பதை மனதில் கொண்டு தீவிர காயம் மற்றும் மரணம் தரும் விபத்துக்களை தடுப்பதில் கவனம் செலுத்துகின்றன. இன்றளவில், பாதுகாப்பான சாலை வடிவமைப்பு என்பது மோதல் புள்ளிகளாக (விபத்து நிகழக்கூடிய) கருதப்படும் இடங்களில் வாகன வேகம், விபத்து நடந்தால் பாதிக்கப்படும் சாலை பயனீட்டாளர்கள் கடுமையான காயங்கள் பெறாமலும், உயிரிழப்பு நேராமலும் அமையும்படி குறைவாக இருக்குமாறு உறுதி செய்யும் ஒரு சாலை சூழலை வழங்குவது ஆகும்.







logo