இரு சக்கர வாகன பராமரிப்பு


❁ வாகன பராமரிப்பில் இரண்டு வகை. ஒன்று, நாமே செய்கிற தினசரிப் பராமரிப்பு. மற்றொன்று, ரெகுலர் மெக்கானிக் சர்வீஸ். இதில், தினசரி பராமரிப்பை சரியாக செய்துவந்தாலே, சர்வீஸ் செலவு மிகவும் குறைவாக இருக்கும்.

வாரம் ஒருமுறை சுத்தம் செய்தல் :

☢ வாரம் ஒருமுறையாவது வாகனத்தை சுத்தம் செய்வது அவசியம். சர்வீஸ் ஸ்டேஷன் சென்றுதான் வாட்டர் சர்வீஸ் செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. வாகனத்தில் சேறு படிந்திருந்தால், வீட்டிலேயே தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம்.

☢ எஞ்சின், கியர்பாக்ஸ், சஸ்பென்ஷன் போன்றவற்றில் ஆயில் லீக் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

☢ பேட்டரியில் டிஸ்டில்ட் வாட்டர் (உப்பு, மினரல்கள் இல்லாத நீர்) அளவு சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

☢ இரண்டு வீல்களிலும் காற்று சரியான அளவு இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும்.

பைக் ஸ்டார்ட் செய்வது எப்படி :

☣ காலையில் முதல்தடவையாக பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது, கிக் ஸ்டார்ட் செய்வதுதான் சிறந்தது. காரணம், இரவு நிறுத்திய பைக்கின் எஞ்சினின் மேல் பகுதியில் தேங்கி இருந்த ஆயில் வடிந்து கீழே தேங்கி இருக்கும். இரவு முழுதும் நின்றிருந்த எஞ்சின் குளிர்ந்திருக்கும்.

☣ அப்போது செல்ஃப் ஸ்டார்ட் செய்தால், உடனே ஸ்டார்ட் ஆகாது. அதனால், சிலமுறை கிக் செய்துவிட்டு செல்ஃப் ஸ்டார்ட்-ஐப் பயன்படுத்தலாம் அல்லது கிக் ஸ்டார்ட்டையே பயன்படுத்தலாம். இதனால், பேட்டரி, செல்ஃப் மோட்டார் ஆயுள் நீடிக்கும்.

☣ மேலும், ஆயில் இல்லாமல் உலர்ந்துபோன எஞ்சினை ஸ்டார்ட் செய்து ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால், ஆயில் சரிவரப் பரவாமல் எஞ்சின் தேய்மானம் ஆகும்.

☣ அதனால், முதலில் பைக்கை ஆன் செய்யாமலேயே மூன்று நான்கு தடவை கிக்கரை மிதித்து ஆயில் பம்ப் செய்துவிட்டு, பிறகு ஆன் செய்து கிக்கர் மூலம் ஸ்டார்ட் செய்வது நல்லது.

☣ அதேபோல், செல்ஃப் ஸ்டார்ட் இருக்கும் பைக்காக இருந்தாலும், காலையில் மட்டும் கிக்கரைப் பயன்படுத்துவது பேட்டரியின் ஆயுளுக்கு நல்லது.

எஞ்சின் ஆயில் :

☮ ஆயிலின் மசகு(Viscosity) தன்மைதான் எஞ்சினை அதிகம் சூடாக்காமலும் உராய்வில் தேய்ந்து போகாமலும் காக்கிறது.

☮ எனவே, வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் குறிப்பிட்ட கி.மீ தூரம் அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை (எது முந்துகிறதோ அதன்படி) எஞ்சின் ஆயில் மாற்றுவது எஞ்சினின் ஆயுளை நீட்டிக்கும்.

டயர் :

☯ பொதுவாக, இரு சக்கர வாகனங்களின் டயர்கள் 35,000 - 40,000 கி.மீ தூரம் வரை மட்டுமே உழைக்கும். சில பைக்குகளில் 20,000 கி.மீயிலேயே மாற்ற வேண்டிவரும்.

☯ அடிக்கடி பஞ்சர் ஆவதுதான் டயர் பலவீனமடைந்துவிட்டது என்பதற்கான அறிகுறி. டயர்களின் பட்டன்கள் தேய்ந்து சமதளமாக டயர் மாறும்வரை ஓட்டுவது ஆபத்து.

☯ டயர் வழியில் பஞ்சரானால், வால் ட்யூபைப் பிடுங்கிவிட்டு பஞ்சர் கடை வரை உருட்டிப் போவோம். ட்யூப்லெஸ் டயரில் ஒரே ஒரு பிளஸ் பாயின்ட் பஞ்சர் கடை வரை வேண்டுமானால், கவனமாக பைக்கை ஓட்டிக்கொண்டு செல்லலாம்.

☯ இது தவிர, எஞ்சின் ஸ்பார்க் பிளக் சுத்தம் செய்வது, காற்றழுத்தத்தைக் கண்காணிப்பது போன்ற அடிப்படை வேலைகளைத் தெரிந்துவைத்திருப்பதும் நல்லது.

பெட்ரோல் :

☢ பெட்ரோல் ஆன் செய்த நிலையில் பைக் ஓட்டுவதற்கும், ரிசர்வ் நிலையில் ஓட்டுவதற்கும் மைலேஜ் வேறுபாடு இருக்கும். அதனால், எப்போதும், ஆன் நிலையில் வைத்து பைக்கை ஓட்டும் வகையில் டேங்க்கில் பெட்ரோல் இருப்பது நல்லது.

பிரேக் :

☣ பிரேக்கில் கால் வைத்துக்கொண்டோ அல்லது பிரேக் லீவரைப் பிடித்தவாறு பைக் ஓட்டுவது தவறு. அப்படி ஓட்டினால், பிரேக் பேட் விரைவில் தேய்ந்துபோகும். மேலும், பிரேக்கை அழுத்தியவாறு ஓட்டுவதால், அதிக வெப்பம் உருவாகும்.

☣ எப்போதும் முன் - பின் இரண்டு பிரேக்குகளையும் ஒன்றாக அப்ளை செய்வதுதான் சிறந்த முறை. இதனால், பிரேக் ட்ரம் தேய்ந்துவிடுவதுடன் மைலேஜும் கணிசமாகக் குறையும். எனவே தேவை ஏற்படும்போது மட்டுமே பிரேக் பெடலில் கால் வைப்பதைப் பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

☣ அதேபோல், அவசரமாக பிரேக் பிடிக்கும் போது கிளட்ச் பிடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில், எஞ்சின் பிரேக் - பைக்கை நிறுத்த பெருமளவு உதவி செய்கிறது. மேலும், பைக்கின் ஸ்டெபிளிட்டியைக் காக்கிறது. மேலும், பைக் நிற்கும் தூரமும் அதிகரிக்கும்.

☣ வேகத்தடையைப் பார்த்தவுடன் நம் கையும் காலும் தானாக பிரேக்கைத் தேட வேண்டும். பைக்கின் வேகம் குறைத்த பின்பே, வேகத் தடை மீது ஏற வேண்டும். இதன் மூலம் ஃபோர்க் சேதமாவதைத் தவிர்க்கலாம்.

☣ ஆக்ஸிலரேட்டர் குறைவதும் பிரேக் பெடல் அழுத்தப்படுவதும் ஒரே சமயத்தில் நிகழும்போது, நீங்கள் திட்டமிட்ட தூரத்துக்கு முன்பாகவே பைக் நின்றுவிடும். டிரம் பிரேக் கொண்ட பைக்கில், முன் - பின் இருக்கும் பிரேக் ஷூ ஒரே மாதிரியாகத் தேய்ந்திருக்க வேண்டும்.

☣ பிரேக் செய்யும்போது, முன் பக்க பிரேக் அதிகமாகவும், பின் பக்க பிரேக் குறைவாகவும் பிடித்தால், பேலன்ஸ் கிடைக்காமல் தடுமாறுவோம். டிஸ்க் பிரேக் கொண்ட பைக் என்றால், ஆயில் அளவு சரியாக இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

☣ டிஸ்க் பிரேக்கைப் பொறுத்தவரை அதில் நாமாகச் செய்ய எதுவும் இல்லை. அதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், பிரேக் ஃப்ளூயிட் லெவல் சரியாக இருக்கிறதா என்பதை மட்டும் கவனிக்க வேண்டும்.

☣ அளவு குறைந்தால், உடனே சர்வீஸ் சென்டருக்குக் கொண்டுசெல்வது நல்லது. அதேபோல், பிரேக் டிஸ்க்கில் சேறு படியாமல் சுத்தமாகப் பராமரித்து வரவேண்டியது அவசியம் ஆகும்.

செயின் ஸ்பிராக்கெட் :

☮ எஞ்சினையும், வீலையும் இணைக்கும் செயின் ஸ்பிராக்கெட், மிக முக்கியமான பாகம். இதன் செயின் அதிக இறுக்கமாகவோ அல்லது மிகத் தளர்வாகவோ இருக்கக் கூடாது. எப்போதும் சரியான இறுக்கத்தில் இருக்க வேண்டும். செயின் தளர்ந்தால், சத்தம் வரும்.

☮ தூசு இருந்தால் சுத்தம் செய்வதும், ஆயில் விட்டுப் பராமரிப்பதும் நீண்ட நாள் உழைக்க வழிவகுக்கும். நேக்கட் பைக் சிலவற்றில் செயின் வெளியே தெரியும்படி இருக்கும்.

☮ இதில், ஆயிலுக்குப் பதில் ஸ்ப்ரே பயன்படுத்தவேண்டும். மேலும், ஸ்பிராக்கெட்டில் இருக்கும் பற்கள் தேய்ந்துபோகாமல் இருக்கிறதா எனக் கவனிப்பதும் அவசியமான ஒன்றாகும்.

☮ அட்ஜஸ்ட் செய்ய முடியாத அளவுக்குத் தேய்ந்திருந்தால் செயின் ஸ்பிராக்கெட்டை மாற்றி விடுவது நல்லது. பொதுவாக, செயின் ஸ்பிராக்கெட் 30,000 - 35,000 கி.மீ வரை உழைக்கும்.

கிளட்ச் :

☮ கிளட்ச் லீவரை கியர் மாற்றுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வாகனம் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது கிளட்ச் லீவரைத் தொடுவதால்கூட எஞ்சினில் இருந்து கிடைக்கும் சக்தி முழுமையாக வீலுக்குச் செல்லாமல் விரயமாகும்.

☮ அதனால், மைலேஜ் பெருமளவு குறையும். கிளட்ச் பிளேட்டின் தேய்மானத்துக்கு ஏற்ப லீவர் கேபிள் அட்ஜஸ்ட் செய்யப்பட வேண்டியது அவசியம். இதை மாதம் ஒருமுறை செக் செய்வது நல்லது.

☮ தேய்ந்துபோன கிளட்ச்சைத் தொடர்ந்து பயன்படுத்துவது பெட்ரோல் விரயத்துக்கு வழி வகுப்பதுடன், கியர்பாக்ஸைப் பாதிக்கும்.

ஸ்பார்க் ப்ளக் :

☯ எஞ்சின் இயங்க மிக முக்கியமான பாகம் ஸ்பார்க் ப்ளக். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சரிபார்க்கவும்.

☯ சரியாக தீப்பொறி வராத ஸ்பார்க் ப்ளக்கால் பைக்கின் உழைப்பு பாதிக்கப்படுவதுடன், பெட்ரோலும் வீணாகும். மேலும், எப்போதும் ஒரு ஸ்பேர் ஸ்பார்க் ப்ளக் உங்கள் பைக்கிலேயே வைத்திருத்தல் நல்லது.

சஸ்பென்ஷன் :

☯ வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடையேற்றினால், முதலில் பாதிக்கப்படுவது சஸ்பென்ஷன்தான். சஸ்பென்ஷன் பழுதடைந்தால், மைலேஜ் உட்பட பைக்கின் அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கும்.

☯ மேலும் சஸ்பென்ஷன் சரியாக இயங்கவில்லை என்றால் கழுத்து வலி, முதுகு வலி, கை வலி வர வாய்ப்பு உண்டு. எனவே, சஸ்பென்ஷன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல், உடனுக்குடன் சரிசெய்வது நல்லது. ஷாக் அப்ஸார்பரைப் பொறுத்தவரை ரீ-கண்டிஷன் செய்து பொருத்த கூடாது.

☯ முன்பக்க ஃபோர்க் சஸ்பென்ஷன் பழுதடைந்து ஆயில் கசிந்தால் உடனே சரிசெய்வதுதான் நல்லது.

☯ ஏனெனில், அதில் உள்ள ஆயில் முழுவதும் வெளியேறி ஆயில் இல்லாத நிலையில் இயங்கினால், ஃபோர்க் வளைந்துவிடும்.

வீல் :

☢ சரியான காற்றழுத்தத்தை எப்போதும் கடைப்பிடித்தால், வீல் பெண்ட் ஆகாமல் இருக்கும். வீல் பஞ்சர் ஆனது தெரியாமல் பைக்கை ஓட்டும்போதுதான் பெரும்பாலும் வீல் பெண்ட் ஆகிறது. அலாய்வால் சுலபத்தில் பெண்ட் ஆகாது என்றாலும், பெண்ட் ஆனால் சரிசெய்ய முடியாது.

எலெக்ட்ரிகல் :

☢ முடிந்தவரை மழையில் நனையாமல், வெயிலில் காயாமல் பைக்கைப் பாதுகாத்தால் எலெக்ட்ரிகல், பெயின்ட் போன்றவற்றில் பிரச்னைகள் வராது.

☢ ஹெட்லைட் பல்பை அதிக வெளிச்சம் தருவது போல மாற்றுவதாக இருந்தால் அல்லது அதிகச் சத்தம் தரும் ஹாரன் பொருத்துவதாக இருந்தால், குறிப்பிட்ட வாட்ஸ் அளவுள்ளதுதான் பொருத்த வேண்டும்.

☢ மாற்றிப் பொருத்தினால், எலெக்ட்ரிகல் பாகங்கள் பாதிப்பதுடன் எலெக்ட்ரிக் ரெகுலேட்டரும் சேதமாகும். எனவே, எலெக்ட்ரிகல் விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏர் ஃபில்ட்டர் :

☣ ஏர் ஃபில்ட்டர் அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியமான பாகம் ஆகும். எஞ்சினுக்குள் செல்லும் காற்றைச் சுத்தமாக்கி அனுப்பும் வேலையைச் செய்யும் இது சேதம் அடைந்திருந்தாலோ அல்லது நீண்டநாள் பயன்படுத்தியதால் தூசு அதிகம் சேர்ந்திருந்தாலோ பிரச்னை உண்டாகும்.

☣ காற்றில் உள்ள தூசு எஞ்சினுக்குள் சென்றால், சிலிண்டரில் ஸ்க்ராட்ச் ஏற்படும். இதனால், எஞ்சின் விரைவாகத் தேயும் வாய்ப்பு இருக்கிறது.

☣ எனவே, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையாவது ஏர்ஃபில்ட்டரைச் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஏர் ஃபில்ட்டரையே மாற்றுவதும் அவசியம் ஆகும்.

கார்புரேட்டர் :

☮ காற்றும் பெட்ரோலும் கலக்கும் இடம் கார்புரேட்டர் ஆகும். இதில், பல ஸ்க்ரூ-க்கள் இருக்கும். சில சமயங்களில் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை என்றால், இதில் இருக்கும் ஏதாவது ஒரு ஸ்க்ரூவைத் திருக்குவது சிலருக்குப் பழக்கமாக இருக்கிறது. அப்படிச் செய்யவே கூடாது.

☮ ஏனெனில், காற்றும் பெட்ரோலும் என்ன விகிதத்தில் கலக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்த ஸ்க்ரூ-க்கள் அட்ஜஸ்ட் செய்யப்பட்டிருக்கும். இதில் ஏதாவது ஒன்றைத் திருகினால், ஏறுக்குமாறாக மாறிவிடும். இதில் கை வைக்காமல் சுத்தமாகப் பராமரிப்பது மட்டுமே சிறந்ததாகும்.

☮ இதில் உள்ள சோக்-கை அதிகாலை நேரத்தில் ஸ்டார்ட் செய்யும்போது அல்லது ஸ்டார்ட்டிங் ட்ரபுள் இருக்கும்போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற சமயத்தில் சோக் ஆன் ஆகி இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு ஓட்டுவது நல்லதாகும்.

☮ ஏனெனில், சோக் அமைப்பு அதிக பெட்ரோல், குறைவான காற்று எஞ்சினுக்குச் செல்வதுபோல வடிவமைக்கப்பட்டது. கவனிக்காமல் ஓட்டினால், டேங்க்கில் இருக்கும் பெட்ரோல் காலியாகிவிடும்.

அவசியம் இல்லாத ஆக்சஸரீஸ் :

☯ புதிதாக பைக் வாங்கிய உடனே பல்வேறு ஆக்சஸரீஸ் வாங்கி அழகுபடுத்துவார்கள். அது தவறு இல்லை. ஆனால், இதில் ஹேண்ட் கிரிப், சீட் கவர், எஞ்சின் கார்டு போன்றவை அவசியமற்றவை என்பதுடன் பைக்குக்கு பாதுகாப்பானதும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

☯ ஏனென்றால், பைக்கில் ஏற்கனவே இருக்கும் ஹேண்ட் கிரிப் மனித கைகளின் அளவுக்கு ஏற்ப திட்டமிட்டு டிஸைன் செய்தவை. அதன் மீது வேறு க்ரிப் பொருத்தும்போது, அளவு மாறுபடும். அளவு மாறினால், வாகனத்தின் செயல்பாடும் மாறுபடும்.

☯ அதேபோல், பைக்கில் இருக்கும் ஒரிஜினல் சீட் கவர் கிரிப்புடன் இருக்கும் வகையில் டிஸைன் செய்யப்பட்டது. அதாவது, பைக் ஓட்டுபவர் திடீரென பிரேக் பிடிக்கும்போது சீட்டில் இருந்து நழுவாமல் இருக்க ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பைக் பராமரிப்பு குறிப்புகள் :

☢ புதிய பைக் வாங்கியவர்களும் அல்லது வாங்கும் எண்ணம் உள்ளவர்களும் கவனத்தில் எடுத்துக்ககொள்ள வேண்டியவை :

☢ புதிய பைக்கில் குறைந்தபட்சம் முதல் 1000 கிமீ வரை மணிக்கு 40கிமீ வேகத்துடனும் அடுத்த 1000கிமீ வரை மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும் பைக்கினை இயக்க வேண்டும்.

☢ சரியான வேகம் சரியான கியர், குறைந்தபட்ச கியரில் அதிக வேகம் எடுப்பதோ அல்லது அதிகபட்ச கியரில் குறைவான வேகத்தில் அதிகம் நேரம் ஓட்டுவதோ கூடாது.

☢ திடீரென வேகம் எடுப்பதோ அல்லது அவசரகதியாக பிரேக் பிடிப்பதையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.

☢ மழை காலத்தில் சேறு சகதி போன்றவை அதிகமாக என்ஜின் மீது படியும். நம்முடைய குறைந்தபட்டச சிசி என்ஜின்கள் அனைத்தும் காற்றினால் குளிர்விக்கப்படுவதனால் என்ஜின் மீது அதிகப்படியான தூசு மற்றும் என்ஜினை மறைக்கும் வகையில் பொருட்களை வைப்பது நல்லதல்ல.

☢ முதல் சர்வீஸ் என்பது மிக அவசியமானது. எனவே முதல் சர்வீசினை தயாரிப்பாளர் கொடுத்துள்ள கிலோ மீட்டருக்குள் செய்துவிடுவது நல்லது.

☢ காலம் தவறுதல், தயாரிப்பாளர் பரிந்துரைத்த கி.மீட்டரில் சர்வீஸ் செய்ய தவறினால் மைலேஜ், என்ஜின் ஆயுள் போன்றவை குறையும்.

☢ அங்கிகரிக்கப்பட்ட பைக் சர்வீஸ் சென்டரில் என்றுமே சர்வீஸ் செய்வது மிகவும் நல்லதாகும். தற்பொழுது விற்பனைக்கு வருகின்ற புதிய பைக்குகள் அனைத்துமே நவீன அம்சத்தை கொண்டுள்ளதாகும்.

☢ ஒவ்வொரு பைக் ஓட்டிகளுக்கும் ஒவ்வொரு விதமான பழக்கங்களும் தனித்துவமான அனுபவங்களும் செயல்பாடும் இருக்கும். எனவே மைலேஜ், என்ஜின் ஆயுள் போன்றவை இவற்றை கொண்டே அமையும்.







logo