நான்கு சக்கர வாகன பராமரிப்பு


✇ வாகன பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம்.

✇ வாகனம் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால்தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.

✇ கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம் கார் வாஷிங்தான். காரைத் துடைத்து சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு. வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்.

✇ நடுவழியில் பிரேக் டவுன் ஆகி திண்டாடுவது, லிட்டருக்கு வெறும் 8 கி.மீ மைலேஜ் கிடைத்து விழி பிதுங்கி நிற்பது, அடிக்கடி ஸ்டார்ட்டிங் பிரச்சனையால் திக்குமுக்காடுவது என சிலருக்கு காரால் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துகொண்டே இருக்கும்.

✇ இதெல்லாம் காரால் வரும் பிரச்சனைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

✇ காரைப் பளிச்சென்று வைத்திருப்பது மட்டுமல்ல காருக்கு சின்னச் சின்னப் பிரச்சனைகள் என்றாலும், அதை உடனடியாக நீங்களே சரிசெய்து, சர்வீஸ் சென்டரிடம் இருந்து பெரிய பில் வராமல் தடுக்க முடியும்.

✇ உங்கள் காரைச் சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும். ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், உங்கள் கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்.

✇ கார் பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். அதை எக்காரணம் கொண்டும் வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள். காரைக் கையாள்வதற்கு முன், அதன் உரிமையாளர் கையேட்டினை (யூசர் மேனுவல்) முழுவதும் படிக்க வேண்டும்.

✇ எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும். அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்ப வேண்டும்.

✇ விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.

✇ பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்ய வேண்டும். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும்.

✇ முடிந்தவரை காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்துவதால், காரின் கேபின் சூடாக சீட் கவர் முதல் பிளாஸ்டிக் கவர் வரை சீக்கிரத்திலேயே பழசாகிவிடும்.

✇ அனைத்து வாகனங்களிளும், ஒரு குறிப்பிட்ட கி.மீக்கு மேல் ஆயில், ஏர் ஃபில்டர், பிரேக் பேட் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.

✇ இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உங்கள் நண்பர்கள் அல்லது உங்கள் உறவினர்கள் யாரிடமாவது காரைக் கொடுத்து ஓட்டிப் பார்க்கச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காரில் நீங்கள் உணராத பிரச்சனைகள் ஏதாவது இருக்கிறதா என்பது தெரிய வரும்.

✇ ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பார்க்க வேண்டும். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திக் கொள்ளலாம்.

✇ விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கிறதா என்று தவறாது செக் செய்ய வேண்டும். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம்.

✇ வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்துங்கள்.

✇ வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெரிகிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.

எஞ்சின் பராமரிப்பு :

⚾ இப்போது வரும் நவீன கார்களின் எஞ்சின், முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் கன்ட்ரோல் யூனிட் மூலம் இயக்கப்படுகிறது. அதனால், ட்யூனிங் எஞ்சின் சார்ந்த விஷயங்களை நாமே செய்ய முடியாது. எனவே, எஞ்சினில் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படாமல், காரை நல்ல முறையில் ஓட்ட வேண்டும்.

⚾ மேலும், எஞ்சினைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வாரத்துக்கு ஒருமுறை பானெட்டைத் திறந்து எஞ்சின் மற்றும் அதன் பாகங்களை நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். வாகன உரிமையாளர் கையேட்டில் குறிப்பிட்டவாறு ஆயில் மற்றும் கூலன்ட்டை மாற்ற வேண்டும்.

⚾ உங்கள் எஞ்சினில் பொருத்தப்பட்டுள்ள ஆயில் பம்ப், எஞ்சினில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ஆயிலைக் கொண்டு சேர்க்க சில பல விநாடிகள் ஆகும். எனவே, காரை ஸ்டார்ட் செய்தவுடன் 30 முதல் 60 விநாடிகள் வரை ஐடிலிங்கில் வைத்திருந்து, அதன் பிறகு ஓட்ட ஆரம்பிக்க வேண்டும்.

⚾ இதனால் எஞ்சின் பாகங்களின் தேய்மானம் குறையும். அதேபோல் எஞ்சினை ஆஃப் செய்வதற்கு முன்பும் 30 முதல் 60 விநாடிகள் ஐடிலிங்கில் விட்டு ஆஃப் செய்வது நல்லது!

⚾ சூடாக இருக்கும் எஞ்சினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

⚾ சமதளத்தில் காரை நிறுத்தி எஞ்சின் ஆயில் சரியான அளவுக்கு இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும். இதற்கு டிப் ஸ்டிக்கைப் பயன்படுத்த வேண்டும்.

⚾ எஞ்சின் ஓவர்ஹீட் ஆனால், டேஷ்போர்டில் இருக்கும் டெம்ப்ரேச்சர் முள் எப்போதும் இல்லாத அளவுக்குக் கூடுதலாகும். ரேடியேட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் ஓடிக்கொண்டே இருந்தாலோ, கூலன்ட் ஒழுகினாலோ, உடனடியாக காரை சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பேட்டரியின் பராமரிப்பு :

✇ பேட்டரி சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பேட்டரியின் ஆயுள் குறைந்தாலோ, ஒயர்கள் துண்டிக்கப்பட்டு இருந்தாலோ பேட்டரியைச் சரி பார்க்க வேண்டும்.

✇ டிஸ்டில்டு வாட்டர் அளவைக் கவனித்து அதை நிரப்ப வேண்டும். கேபிள், விளக்குகள் ஏதாவது பழுதாகி இருந்தால் மாற்றி விட வேண்டும். பேட்டரியில் லீக் இருந்தால், பேட்டரியையே மாற்ற வேண்டும்.

✇ கார் பேட்டரியை மாற்றுவது சுலபமான விஷயம் அல்ல. ஆனால், எளிமையான வழிகளைப் பின்பற்றினால், சுலபமாக பேட்டரியை மாற்ற முடியும்.

✇ முதலில், நெகட்டீவ் அதாவது மைனஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள கேபிளின் இணைப்பை அகற்றுங்கள். அதேபோல், ப்ளஸ் குறியுடன் இணைக்கப்பட்டுள்ள சிவப்பு நிற கேபிளையும் அகற்ற வேண்டும்.

✇ இப்போது பேட்டரியை வெளியே எடுக்கலாம். பேட்டரி கனமாக இருப்பதால் வெளியே எடுக்கும்போது கவனம் தேவை. பேட்டரி வைத்திருந்த இடம் அழுக்காக இருந்தால், அதை நன்றாகச் சுத்தப்படுத்த வேண்டும்.

✇ புதிய பேட்டரியை ஏற்கெனவே பேட்டரி இருந்த இடத்தில் வைத்துவிட்டு, டெர்மினல்களில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி, ப்ளஸ் கேபிளையும், மைனஸ் கேபிளையும் பேட்டரி டெர்மினலில் இணைக்க வேண்டும்.

கியர் பாக்ஸ் பராமரிப்பு :

⚾ கியர் பாக்ஸ் மிக மிக முக்கியமான பாகம் ஆகும். டிரான்ஸ்மிஷன் ஆயில் சரியான அளவு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கிளட்ச், கியர் ஷிஃப்ட் ஆகியவற்றை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும்.

எ.சி பராமரிப்பு :

⚾ கார் எ.சியை ரெகுலராகக் கவனிக்க வேண்டும். காரில் இருந்து சரியான அளவுக்குக் குளிர்ந்த காற்று வரவில்லை என்றால், உடனடியாக அதைச் சரி செய்யச் சொல்ல வேண்டும். எ.சி காற்று ஒழுங்காக வராததற்கு கேஸ் லீக், பெல்ட் டென்ஷன், கம்ப்ரஸர் லீக் ஆகியவை காரணமாக இருக்கலாம்.

பிரேக் பராமரிப்பு :

⚾ மிகவும் சாஃப்ட்டான பிரேக் பெடல், பிரேக் லைட் எரியாமல் போவது, பிரேக்கில் இருந்து விதவிதமான சத்தங்கள் எழும்புவது, இதெல்லாம் பிரேக்கில் பிரச்சனை இருக்கிறது என்பதற்கான அடையாளங்கள் ஆகும்.

⚾ பிரேக்கின் பாகங்களை மாற்றியோ அல்லது பிரேக் ஆயிலை மாற்றியோ இந்தப் பிரச்சனைகளைச் சரி செய்துவிட முடியும். இப்போதுதானே பிரேக் ஷூ மாற்றினோம் என்று நினைக்கக் கூடாது.

⚾ பிரேக் ஷூ, பிரேக் பேட் ஆகியவை விரைவில் தேயும் தன்மை கொண்டவை. அதனால் சத்தம் கேட்க ஆரம்பித்தவுடனே மாற்றிவிடுவது நல்லது.

வாகனத்தின் உள்ளே கவனிக்க வேண்டியவை :

✇ காருக்குள் இருக்கும் தூசு, மண், குப்பைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

✇ காரின் உள்பக்கம் தூசு, அழுக்குக் கறை, துரு ஆகியவை படிந்திருந்தால் உடனே சுத்தம் செய்தல் அவசியம்.

வாகனத்தின் வெளியே கவனிக்க வேண்டியவை :

✇ எப்போதுமே காரை நிழலான இடத்தில் வைத்துச் சுத்தம் செய்ய வேண்டும்.

✇ காரின் உள்ளலங்காரத்தைக் குலைத்து விடாத வகையில், தரமான பாலீஷ் பயன்படுத்துவது அவசியம்.

✇ வேக்யூமை வைத்துச் சுத்தம் செய்தபிறகு கொஞ்சம் நனைத்த காட்டன் டவலை வைத்து டேஷ் போர்டு, சென்டர் கன்சோல் அனைத்தையும் துடைக்க வேண்டும். கப் ஹோல்டர், சீட்டுக்கு அடியில் பெரிய வேக்யூமை வைத்து காரை முழுவதுமாகச் சுத்தம் செய்ய வேண்டும்.

✇ காரின் பர்ஃபாமென்ஸுக்கு மிக மிக முக்கியமானது டயர். காரின் எடையைத் தாங்குவதோடு, மேடு பள்ளங்களில் குதித்து எழும்புவதும் டயர்களின் முக்கியமான வேலை. டயரில் பிரச்சனை என்றாலும், அது எஞ்சினில் எதிரொலிக்கும். டயர்களும் எஞ்சினும் இணைந்து இயங்கினால் தான் கார் சீராக இயங்கும்.

டயர் பராமரிப்பு :

டயரை மாற்றுங்கள் :

✇ 8,000 கி.மீக்கு ஒருமுறை முன் வீல்களைப் பின் பக்கத்திலும், பின் வீல்களை முன் பக்கத்திலும் மாற்றிப் பொருத்த வேண்டும். முன் வீல்கள் சீக்கிரமாக தேயும். இதுபோல் மாற்றிப் பொருத்தினால், டயர்களின் ஆயுள் நீடிக்கும்.

டயர் பிரஷர் :

✇ வாரத்துக்கு ஒருமுறை டயரில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். காற்றின் அளவு சரியாக இல்லையென்றால், மைலேஜ், கையாளுமை மற்றும் பயண சொகுசில் சிக்கல்கள் வரும்! வேகமாகப் போகும்போது கையில் அதிர்வுகள் அதிகமாகத் தெரிந்தால், டயர்களில் காற்று குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஓவர் வெயிட் :

✇ காருக்குள் தேவையான பொருட்களை மட்டுமே வைத்திருக்க வேண்டும். தேவையில்லாத பொருட்களைப் போட்டு வைக்கும் குடோனாக காரைப் பயன்படுத்தாதீர்கள். காரின் எடை கூடக் கூட, ஓடும் காரின் டயர்கள் ஓவர் ஹீட் ஆகும். அதனால், டயர்கள் சீக்கிரத்தில் பழுதடைந்து, மைலேஜும் குறையும்.

ஸ்பீடு :

✇ ஓவர் ஸ்பீடும் டயர்களின் ஆயுளைப் பாதிக்கும். ஒரு குறிப்பிட்ட வேகத்தைத்தான் டயர்கள் தாக்குப் பிடிக்கும். அதிகப்படியான வேகத்தால் டயர்கள் ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் ஆபத்து இருக்கிறது.

ஸ்பார்க் ப்ளக்கை மாற்றுவது எப்படி?

⚾ பெட்ரோல் எஞ்சினில் மட்டும்தான் ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். டீசல் கார்களில் இருக்காது. ஸ்பார்க் ப்ளக்கினுள் தூசு, அழுக்குகள் சேர்ந்தாலோ, தனது ஆயுளின் இறுதிக் கட்டத்தில் இருந்தாலோ, கார் ஒழுங்காக ஸ்டார்ட் ஆகாமல் மிஸ் ஃபயர் ஆகும்.

⚾ அதனால், மைலேஜும் குறையும். அதிகப்படியான புகையும் வெளியேறும். 15,000- 20,000 கி.மீ.யில் ஸ்பார்க் ப்ளக்குகளை மாற்றிவிடுவது நல்லது.

⚾ 4 சிலிண்டர்கள் கொண்ட எஞ்சின் என்றால், நான்கு ஸ்பார்க் ப்ளக்குகள் இருக்கும். ஸ்பார்க் ப்ளக்கை அகற்றி விட்டு, நன்றாகச் சுத்தம் செய்யுங்கள். இதனால், அழுக்குகள் எதுவும் எஞ்சின் சிலிண்டருக்குள் நுழையாது.

⚾ பழுப்பு நிறம் படிந்த ஸ்பார்க் பிளக்குகள் என்றால், பிரச்சனை இல்லை என்று அர்த்தம். அதுவே ஆயில் அதிகமாகப் படிந்தது என்றால், பிஸ்டனில் இருக்கும் ஆயில் கன்ட்ரோல் ரிங்ஸில் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம்.

⚾ உடனடியாக இதை சர்வீஸ் சென்டரில் கொடுத்துச் சரி செய்யச் சொல்லுங்கள். ஸ்பார்க் ப்ளக் அதிக அழுக்காக இருந்தாலோ, கீரல் இருந்தாலோ உடனடியாக அதை மாற்றி விடுவது நல்லது.

⚾ நீங்கள் புதிதாக வாங்கிப் பொருத்தும் ஸ்பார்க் ப்ளக்கின் அளவு, பழைய ஸ்பார்க் ப்ளக்கோடு பொருந்தி இருக்கிறதா என்று ஒருமுறை செக் செய்து கொள்ள வேண்டும். மீண்டும் ஸ்பார்க் ப்ளக்கை அதற்குரிய டூல்ஸ் கொண்டு மேனுவலில் குறிப்பிட்டுள்ளது போலத் திருக வேண்டும்.

ஆயில் மாற்றுவது எப்படி?

✇ எரிபொருள் – கார் இயங்குவதற்கு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் எஞ்சின் ஸ்மூத்தாக இயங்குவதற்கு எஞ்சின் ஆயில் மிக மிக முக்கியம். அதனால், மேனுவலில் சொல்லி இருப்பதைப்போல, குறிப்பிட்ட கி.மீ.க்கு ஒருமுறை எஞ்சின் ஆயிலை மாற்ற மறக்க கூடாது.

✇ முதலில் டேங்கினுள் இருக்கும் ஆயிலை வெளியேற்றுவதற்காக, காரை ஸ்டார்ட் செய்து எஞ்சினைச் சூடாக்க வேண்டும். இதன் மூலம் ஆயில் சூடேறி இளகிவிடும். இதனால், ஆயிலை வெளியேற்றுவது சுலபம்.

✇ எஞ்சினை ஆஃப் செய்து, ஆக்ஸில் ஸ்டாண்டில் நிறுத்தி வைத்துவிட்டு, ட்ரைன் நட்டை அகற்றி ஆயிலை வெளியேற்ற வேண்டும். ஆயில் ஃபில்டரை, ஆயில் ஃபில்டர் ரிமூவர் வைத்து அகற்ற வேண்டும்.

✇ புதிய ஆயில், சரியான எடை மற்றும் விஸ்காஸிட்டி கொண்டதுதானா என்று செக் செய்துகொள்ள வேண்டும். கொஞ்சம் ஆயிலை ஃபில்டர் சீலின் மீது தடவ வேண்டும்.

✇ ஓனர்ஸ் மேனுவலில் எந்த அளவுக்கு ஆயில் நிரப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆயிலை நிரப்ப வேண்டும்.

✇ எஞ்சின் டிப் ஸ்டிக்கை எடுத்து, எவ்வளவு ஆயில் இருக்கிறது என்பதை செக் செய்து கொள்ள வேண்டும். சரியான அளவு வரும் வரை ஆயிலை நிரப்ப வேண்டும்.

பிரேக் டவுன் :

⚾ சாலையில் சென்று கொண்டு இருக்கும்போது, திடீரென கார் பிரேக் டவுனாகி நின்றுவிட்டால், காரை ஓரமாக நிறுத்தி வார்னிங் லைட்ஸ்-ஐ ஒளிரவிட வேண்டும். காருக்குள் இருப்பவர்களை சாலையின் ஓரத்தில் பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்து விட்டு, கார் தயாரிப்பாளரின் எமர்ஜென்சி சர்வீஸுக்கு போன் செய்ய வேண்டும்.

⚾ காரில் போய்க் கொண்டு இருக்கும் போது, திடீரென டயர் வெடித்தாலோ அல்லது பஞ்சரானாலோ, உங்கள் கார் பஞ்சரான டயரை நோக்கித் திரும்பும். அதாவது முன் வீல் வலது பக்க டயர் பஞ்சரானால், கார் வலது பக்கமாகத் திரும்பும்.

⚾ பின் வீல் (டயர்) பஞ்சரானால் உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். கார் திரும்புகிறதே என்பதற்காக நீங்கள் ஸ்டீயரிங்கை எதிர் திசையில் திருப்பக் கூடாது.

⚾ ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்து விட வேண்டும். காரின் கன்ட்ரோல் உங்கள் கைக்கு வந்து விட்டதென்றால், மெதுவாக பிரேக்கை அழுத்த வேண்டும்.

⚾ அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து, காரைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்துங்கள். எச்சரிக்கை விளக்குகளை ஒளிரவிட்டு, மற்ற வாகனங்களுக்கு சிக்னல் கொடுக்க வேண்டும்.

⚾ ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறைக்க வேண்டும்.

⚾ ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வர வேண்டும். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு எஞ்சினை ஆஃப் செய்யுங்கள்.

திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் செய்ய வேண்டியவை :

⚾ மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி, ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட காராக இருந்தாலும் சரி படிப்படியாக கியரைக் குறைக்க வேண்டும். ஃபர்ஸ்ட் கியரில், காரை குறைந்த வேகத்துக்குக் கொண்டு வர வேண்டும்.

⚾ மெதுவாக ஹேண்ட் பிரேக்கைப் பிடிக்க வேண்டும். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய ஹாரன் அல்லது எச்சரிக்கை விளக்குகளைப் போட்டுக் காண்பித்து, சாலையின் ஓரத்துக்கு வந்து விட வேண்டும்.

உங்கள் எதிரே வேகமாக இன்னொரு வாகனம் வந்தால் செய்ய வேண்டியவை :

✇ வீல் ஸ்கிட் ஆகாமல் பிரேக்கை நன்றாக அழுத்திக் கொண்டே ஹாரனையும், ஃப்ளாஷ் லைட்டையும் போட்டுக் காட்ட வேண்டும். எதிரே வரும் வாகனத்துக்கு எவ்வளவு இடம் கொடுக்க முடியுமோ, அந்த அளவுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

✇ எதிரே வரும் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகவும் வேகமாக நெருங்கி வருகிறது என்றால், உடனடியாக சாலையின் இடது ஓரத்துக்கு வந்துவிட வேண்டும். சாலையைவிட்டு வெளியே வந்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் உடனடியாகச் சாலைக்கு வர முயற்சி செய்யக் கூடாது.

✇ ஸ்டீயரிங்கை க்ரிப்பாக பிடித்துக் கொண்டு, பின்னால் எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு, மீண்டும் சாலைக்குள் செல்ல வேண்டும்.

வாகனம் தீப்பிடித்து எரிந்தால் செய்ய வேண்டிவை :

✇ வாகனம் தீப்பிடித்து எரிகிறது என்றால், 90 சதவிகிதம் எலெக்ட்ரிகல் ஒயர்களில் ஏற்படும் ஷார்ட் சர்க்யூட்தான் காரணமாக இருக்க முடியும். மெதுவாக காரை நிறுத்தி எஞ்சினை ஆஃப் செய்துவிட்டு உடனடியாக காரை விட்டு வெளியே வந்துவிட வேண்டும்.

✇ முடிந்தால், மற்றவர்களின் உதவியை நாடி, மண், நீர் பயன்படுத்தி தீயை அணைக்கப் பாருங்கள். கார் முழுவதுமாக எரிய ஆரம்பித்துவிட்டால் வாகனத்தை விட்டு பல அடி தூரத்துக்கு வந்துவிட வேண்டும். எரிபொருள் இருப்பதால், வெடிக்கும் அபாயமும் இருக்கிறது.

✇ சிறிது தூரப் பயணங்களுக்கு காரை உபயோகப்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக ஜிம், மார்க்கெட் போன்ற இடங்களுக்கு காரில் போவதை விட டூவீலர் அல்லது நடந்து செல்வதே நல்லது.

✇ வாகனத்தை நாம் அதிகப்படியாக உபயோகப் படுத்தும்போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்பதோடு, எரிபொருளும் வீணாகிக் கொண்டே இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.

விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் நான்கு. அவை,

1. ஓவர் ஸ்பீடு

2. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல்

3. சோர்வாக இருக்கும்போது வாகனம் ஓட்டுதல்

4. பாதுகாப்பு விஷயங்களைக் கவனத்தில் கொள்ளாமல் (உதாரணம்: சீட் பெல்ட் அணியாமல்) வாகனம் ஓட்டுதல்.

✇ சாலையில் விபத்தைத் தவிர்க்கும் பொறுப்பு, வாகனத்தை ஓட்டும் டிரைவர்களிடம்தான் 90 சதவிகிதம் இருக்கிறது! வாகனம் ஓட்டும் ஒவ்வொருவருமே இந்த நான்கு விஷயங்களிலும் கவனமாக இருந்தால், விபத்தை எளிதில் தவிர்க்க முடியும்!

ஆல்கஹாலால் ஏற்படும் தீங்குகள் :

⚾ குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் நடக்கும் விபத்துகள்தான் தமிழகத்தில் அதிகம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது சட்டப்படி தவறு. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உங்கள் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுவிடும்.

⚾ விபத்து ஏற்படப் போகிறது என்று ஒரு விநாடிக்கு முன்பு தெரிந்தால்கூட ஸ்டீயரிங்கைத் திருப்பி விபத்தைத் தடுத்துவிட முடியும். ஆனால், பெரும்பாலான விபத்துகள் ஒரு விநாடிக்கும் குறைவாக, அதாவது கண் இமைக்கும் நேரத்தில் நடப்பதால்தான் அவற்றைத் தடுக்க முடியாமல் போய் விடுகிறது.

⚾ மதுவின் மயக்கத்தில் இருக்கும்போது, ஆல்கஹால் ரத்தத்துடன் கலந்து மூளையின் செயல்பாடுகளை மந்தமாக்கி விடும். இதனால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

⚾ பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிவது எவ்வளவு கட்டாயமோ, அதுபோல் கார் ஓட்டுபவர் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும்.

கார் ஓட்டும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை :

✇ விபத்து ஏற்பட்ட உடன் நாம் உடனே சொல்லும் காரணம், அந்த வாகனத்தை நான் பார்க்கவேஇல்லை என்பதுதான். பெரும்பாலான விபத்துகளுக்குக் காரணமே கவனம் இல்லாமல் காரை ஓட்டுவதுதான்.

✇ செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டுவது, காருக்குள் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுவது, ரேடியோ கேட்பதில் அதிகக் கவனம் செலுத்துவது அல்லது பகல் கனவு கண்டு கொண்டே காரை ஓட்டுவது போன்ற காரணங்களினால் தான் விபத்துகள் நடக்கின்றன.

✇ நீங்கள் கார் ஓட்டும்போது பின்னால் வரும் வாகனங்களுக்குத் தொடர்ந்து சரியான சிக்னல்களைக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் திரும்பும்போது, இண்டிகேட்டர்களைப் போட்டுக் காட்ட மறக்காதீர்கள். அதேபோல், லேன் மாறும்போதும் சிக்னல் செய்ய வேண்டும்.

✇ சாலையில் ஆட்கள் இல்லை என்றாலும் இந்தப் பழக்கத்தைப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போது தான் இது எப்போதுமே மறக்காது. பிரேக் அடிக்கும் போது, பிரேக் லைட்டுகள் ஒளிர்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

✇ காரின் தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பராமரிப்பு முறைகளும் மாறுபடும். காரின் பராமரிப்பு குறித்து உங்களுக்குத் தெரியாத விஷயங்களை சர்வீஸ் சென்டரில் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

✇ உங்களின் காரை முறையாகப் பராமரிக்கும்போது, அநாவசியச் செலவுகள் குறையும், காரின் மைலேஜ் அதிகரிக்கும் என்பதோடு, காரை நீங்கள் விற்கும்போதும் நல்ல விலைக்கு விற்க முடியும், அனைத்துக்கும் மேலாக நீங்கள் காரில் செல்லும்போது பாதுகாப்பாக உணர்வீர்கள்.







logo