பள்ளி குழந்தைகள் கவனிக்க வேண்டியவை



பள்ளிக் குழந்தைகளுக்கான அறிவுரைகள்:

☻ பொதுச்சாலையை கடக்கும்பொழுது குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் கீழே விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பொதுவாக சாலைகளில் கடைபிடிக்கவேண்டிய அறிவுரைகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்காமல் தனியாக செல்ல அனுதிக்க கூடாது. எப்போதும் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் சாலைகளில் கடைபிடிக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டே சாலை பாதுகாப்பு குறித்த அறிவை பெறுகிறார்கள் என்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெளியே அழைத்து செல்லும் பொழுதும் சாலை விதிகளை சரியாக கடைபிடிக்க வேண்டும். அவர்கள் எந்த வயதில் தனியாகவே சாலைகளில் செல்ல இயலும் என்பதையும் பெற்றோர்கள் தீர்மானிக்க வேண்டும்.

☻ குழந்தைகளே! சாலை, விளையாட்டு மைதானம் அல்ல. சாலையில் கிரிக்கெட் ஆடுதல், பம்பரம், கோலி, பட்டம் விடுதல், பந்தாடுதல் போன்ற விளையாட்டுகளை விளையாட வேண்டாம். விளையாட விளையாட்டு மைதானம் செல்லவும். சாலை, போக்குவரத்திற்கு மட்டுமே. சாலையில் விளையாடினால் உங்கள் உயிருக்கே ஆபத்து நேரலாம்.

☻ சாலை விதிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். அது உங்களுக்கும், நாட்டிற்கும் நன்மை பயக்கும்.

☻ 18 வயது ஆன பிறகே வாகனம் ஓட்ட வேண்டும்.

பள்ளிக்கு செல்லும் பொழுது கடைப்பிடிக்க வேண்டியவை :

1. நடைபாதையில் மட்டுமே செல்ல வேண்டும். நடைபாதைகள் இல்லாத சாலைகளில் இடது ஓரமாக நடந்து செல்ல வேண்டும்.

2. சாலைகளில் எந்த வித பதட்டத்துடனும் செல்லாதீர்கள். சாலைகளில் வேகமாக செல்லுவதும், ஓடுவதும் கூடாது.

3. சாலைகளை கடப்பதற்கு என குறிக்கப்பட்ட கறுப்பு வெள்ளை கட்டமிடப்பட்ட இடங்களில், நடை மேம்பாலங்கள், போக்குவரத்து கட்டுபாட்டு சமிக்ஞை உள்ள இடங்கள் போன்றவற்றில் மட்டுமே சாலையை கடக்கவேண்டும்.

4. போக்குவரத்து கட்டுபாட்டு விளக்குகள் உள்ள இடங்களில் பச்சை விளக்கு எரிந்தால் மட்டுமே சாலையை கடக்கவேண்டும். போக்குவரத்து காவலர் உள்ள சாலையை கடக்கும் இடங்களில் அவரின் இசைவுக்கேற்ப சாலைகளை கடக்கவேண்டும்.

5. சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தைக் கடந்து சாலைக்கு செல்லும் போது, சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்கள் தெரியாமல் போகலாம். ஏனென்றால் நிறுத்தப்பட்டுள்ள வாகனம் நமது உயரத்தைவிட அதிகமாக இருக்கலாம். எனவே அகலமான சாலையில் மையத்தில் தீவுத்திடல் (ஐலாண்ட் - Island) இருந்தால் இரண்டு பகுதிகளாக கடக்க வேண்டும். ஒரு பகுதியை முதலில் கடக்க வேண்டும். பின்னர் நின்று பார்த்து மறுப்பகுதியைக் கடக்க வேண்டும்.

6. ஒரு வழிப்பாதைகளை கடக்கும் பொழுது வாகனவகைக்கேற்ப ஒதுக்கப்பட்ட எல்லா வழிகளிலும் வாகனங்கள் செல்லாமல் இருக்கும் பொழுதே கடக்க வேண்டும்.

7. திருப்பங்களிலோ, வளைவுகளிலோ ஒரு போதும் சாலையை கடக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்க்க இயலாது.

8. சாலையை ஓடிக்கடக்க முயற்சிப்பது தவறானதாகும். ஏனெனில் அவ்வாறு செல்லும் பொழுது தவறி கீழே விழ வாய்ப்புள்ளது. அதுபெரும் அபாயத்தை விளைவிக்கும்.

பள்ளிப்பேருந்துகளில் செல்லும் பொழுது கவனிக்க வேண்டியவை :

1. வீட்டை விட்டு புறப்படும் பொழுது சற்று முன்பாகவே புறப்படுங்கள். ஏனென்றால் பள்ளி வாகனத்தில் ஏறுவதற்கு எவ்வித அவசரமும் பட தேவையில்லை.

2. பேருந்து நிறுத்தங்களில், வரிசையில் நிற்க வேண்டும். பேருந்து வந்து பேருந்து நிறுத்ததில் நின்ற பின்னர் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக ஏற வேண்டும்.

3. பேருந்தில் பயணம் செய்யும்பொழுது சப்தமிடுவதோ, கூக்குரலிடுவதோ கூடாது. அது பேருந்து ஓட்டுநரின் கவனத்தை சிதறடிக்கும்.

4. பள்ளி நிர்வாகத்தால் தீர்மானிக்கப்பட்ட நிறுத்தங்கள் தவிர பிற இடங்களில் பள்ளிபேருந்திலிருந்து ஏறுவதும் இறங்குவதும் கூடாது. சிக்னலில் வாகனம் நிற்கும்போதும் ஏறவோ இறங்கவோ கூடாது.

5. பேருந்துகளில் பயனிக்கும் பொழுதும் திருப்பங்களின் போது கைப்பிடியை பிடித்து பயணிக்க வேண்டும்.

6.பேருந்தின் படிக்கட்டுகளில் உட்கார்ந்தோ, நின்று கொண்டோ பயணிக்க கூடாது.

7. பேருந்தில் பயணிக்கும் பொழுது, பேருந்தின் வெளியே கை, கால், தலை நீட்டக்கூடாது.

8. பேருந்தில் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

9. பள்ளி வாகன ஓட்டுநர் பணியின் போது செல்போன் உபயோகிக்கக் கூடாது.

உச்சநீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட பள்ளிப் பேருந்து கடைபிடிக்க வேண்டிய விதிகள் :

1. பள்ளி வாகனம் என்று வாகனத்தின் முன் பின் என இருபுறமும் எழுதப்பட வேண்டும். வாகனத்தின் முன்னும் பின்னும் 20 செ.மீ. விட்டத்திலும், பக்கவாட்டில் 60 செ.மீ. விட்டத்திலும் பள்ளி வாகனம் என சின்னம் (Emblem) வரையப்பட வேண்டும்.

2. வாடகை ஒப்பந்த ஊர்தி என்றால் பள்ளி செல்லும் குழந்தைகளின் பணிக்கு என்று குறிப்பிட வேண்டும்.

3. முதலுதவிப்பெட்டியை கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.

4. நீளவாக்கில் பள்ளி வாகனத்தில் ஐன்னல்களில் இருப்பு கம்பிகள் பொருத்தப்பட வேண்டும்.

5. தீயணைக்கும் கருவி வாகனத்தில் இருக்க வேண்டும்.

6. வாகனத்தின் பக்கவாட்டு விபரத்தில் பள்ளியின் பெயரும் மற்றும் தொலைபேசி எண்ணும் குறிப்பிட வேண்டும்.

7. வாகனத்தில் கதவுகளுக்கு பாதுகாப்பான தாழ்ப்பாள் இருக்க வேண்டும்.

8. பள்ளி குழந்தை பாடப்புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திட இருக்கையின் கீழ் வசதி ஏற்படுத்த வேண்டும்.

9. பள்ளி சார்பாக காப்பாளர் ஒருவர் உடன் பயணிக்க வேண்டும்.

10. பள்ளிக் குழந்தையின் பெற்றோரோ அல்லது பள்ளி ஆசிரியரோ பள்ளிப் பேருந்தில் பாதுகாப்பு விதிகள் கடைபிடிப்பதை உறுதி செய்து குழந்தைகளை பேருந்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும்.

11. பள்ளி வாகனத்தை ஓட்டுபவர் குறைந்தது 10 ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த மேற்கண்ட உச்சநீதிமன்றத்தில் வகுக்கப்பட்ட பாதுகாப்பு விதிகளை அனைவரும் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்.







logo