விபத்து ஏற்பட்ட இடத்தில் உடனே செய்ய வேண்டிய முதலுதவி


★ விபத்தால் பாதிக்கப்பட்டவர் பதட்டப்படாமல், பயப்படாமல் சூழ்நிலையை புரிந்து கொண்டு உதவிக்கு மற்றவரை அழைக்க வேண்டும்.

★ விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு உதவும் போது, அவருக்கு மூச்சு சுவாசம் உள்ளதா, இரத்த ஒழுகல் ஏற்பட்டுள்ளதா, எழும்பு முறிவா, பாதிக்கப்பட்டவரின் பொதுவான நிலை அந்த சமயத்தில் எப்படி உள்ளது போன்றவற்றை ஆராயந்து செயல்படவும்.

★ உடனடியாக ஆம்புலன்ஸ், மருத்துவமனை, காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

★ மிக மோசமாக அடிபட்டு அவர் உயிர் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், தயங்காமல் உயிர் காக்க முடிந்தவரை உதவுங்கள்.

★ சாலையில் விபத்து ஏற்படும் பொழுது உதவி செய்ய தயங்காமல் முன்வர வேண்டும்.

★ அடிபட்டவரால் பேச முடிகிறதா, பெயர் என்ன? சீராக சுவாசிக்கிறாரா என்றும் நாடி துடிப்பையும் அறிய வேண்டும். உடனடியாக ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். மருத்துவரிடம் நடந்தவற்றை கூற வேண்டும்.

★ நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு போகும் போது ஸ்ட்ரெட்சர் மூலமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அவருடைய முதுகையும், கழுத்தையும் நேரடியாக வைக்க வேண்டும். நோயாளி நேராக படுத்திருக்க வேண்டும்.

★ முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

★ விபத்தால் பாதிக்கப்பட்டவர் அடுத்தவரின் உதவிக்காக காத்திருக்காமல், தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளவும், உங்களுடன் விபத்தில் சிக்கியவரையும் பாதுகாக்க முற்படுதல் அவசியம்.


இரத்தம் வெளியேறினால் உடனடியாக செய்யவேண்டிய முதலுதவி :

★ இரத்தம் வெளியேறும் இடத்தை சுத்தமான துணியால் இருக்கி கட்ட வேண்டும்.

★ இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.

★ அடிபட்டவரை படுக்க வையுங்கள். அடிப்பட்ட இடத்தை உயர்த்தி வையுங்கள் (எலும்பு முறிவு இல்லாவிட்டால்) சிறிய காயங்களுக்கு மட்டும் பஞ்சு அல்லது மெல்லிய துணியால் மூடி அல்லது பாண்ட் எய்ட் போன்றவற்றால் ஒட்டி விடவும்.

★ சிறிய சிராய்ப்பு போன்ற காயங்கள் என்றால், இரத்தம் தானாகவே கசிவது நின்றுவிடும். அந்த காயத்தின் மீது antibiotic மருந்தில் பஞ்சை நனைத்து சுத்தம் செய்து காயத்திற்கு மருந்து தடவி கட்டுப் போடலாம்.


எலும்பு முறிவு ஏற்ப்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி :

★ அடிப்பட்ட பாகத்தை நேராக வைத்து எலும்பு அதன் இடத்திலே பொருந்துமாறு வசதியாக வைத்துக் கட்டவும். உடைப்பட்ட எலும்புகள் நகரக்கூடாது.

★ தேவைப்பட்டால் உடைந்த கையை மார்போடு சேர்த்து லேசாக கட்டலாம். உடைந்த காலை மற்ற காலோடு சேர்த்து வைத்து கட்டலாம்.


தீப்புண் ஏற்ப்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி :

★ வெப்பத்தை தணிக்கவும், எதனால் தீ உண்டானதோ அதை நீக்கவும்.

★ ஒருவரின் ஆடையில் தீப்பற்றிவிட்டால், உடனே தண்ணீரை அவர் மேல் ஊற்றி, தீ பரவாமல் அணைக்கலாம்.

★ தண்ணீர் ஊற்றும்போது தோல் குளிர்ச்சியடைந்து திசுக்கள் சேதமடைவது குறைக்கப்படுகிறது.

★ கம்பளி அல்லது ஜமக்காளம் போன்ற தடிமனான துணிகள் கொண்டு பாதிக்கப்பட்டவரைப் போர்த்தித் தரையில் உருளச் செய்யும்போது, அந்த வெப்பத்தில் திசுக்கள் வெந்துவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, முடிந்தவரை தண்ணீர் ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.

★ தண்ணீர் இல்லாத சூழ்நிலையில் கம்பளி அல்லது ஜமக்காளத்தைப் பயன்படுத்தலாம். தீயை அணைத்த பிறகு, தீக்காயங்களின் மீதும், தீக்காயமுற்றவர் மீதும் நம் இஷ்டத்துக்குக் கைகளை வைக்கக் கூடாது. தோல் நழுவி விடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் தீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சி செய்யாதீர்கள்.

★ தீக்காயம் அடைந்தவரைக் காப்பாற்றச் செல்பவர்களே பல நேரங்களில் தீ விபத்துகளில் சிக்கிக்கொள்வது உண்டு. எனவே காப்பாற்றச் செல்பவர் தன்னுடைய முன்புறத்தில் பாதுகாப்பாக ஜமக்காளத்தை நன்றாக விரித்துப் பிடித்துக்கொண்டே பாதிக்கப்பட்டவரை அணுக வேண்டும்.

★ காயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், காலணி மற்றும் அணிந்துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற்படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்களை நீக்குவது கடினமாகிவிடும்.

★ உடனடியாக டாக்டரிடம் /மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவும்.


மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி :

★ மூச்சுத் திணறல் ஏற்பட்டவர்களுக்கு, ஹெய்ம்லீக் மேன்யூவர் எனும் முதல் உதவியைச் செய்ய வேண்டும்.

★ மூச்சுத் திணறலுக்கு ஆளானவரின் பின்பக்கமாக நின்று அவரது விலா எலும்புகளுக்குக் கீழாக, அதாவது வயிற்றின் மத்தியில் இரண்டு கைகளாலும் உள்நோக்கி அழுத்தியவாறு மேலே தூக்க வேண்டும். இப்படிச் சில முறைகள் செய்ய வேண்டும். இதனால், வயிற்றுப் பகுதியில் இருந்து கிளம்பும் வாயு, தொண்டையில் சிக்கியுள்ள உணவை வாய் வழியாக வெளியேத் தள்ளிவிடும்.

★ அந்த நிலையிலேயே, அவரைத் தூக்க முயற்சிப்பதுபோலச் செய்ய வேண்டும். அப்போது சுவாசப் பாதையில் ஏதேனும் பாதிப்பு இருந்தால், நிவாரணம் கிடைக்கும்.


மயக்கம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி :

★ நம் மூளை செயல்பட ஆக்சிஜனும் குளுகோஸும் தேவை. மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் குளுகோஸை ரத்தம் கொண்டுசெல்கிறது. மூளைக்குப் போதுமான ரத்தம் கிடைக்காதபோது மூளையின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு, அதனால் மயக்கம் ஏற்படுகிறது. தற்காலிக மயக்கத்துக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது, ரத்த அழுத்தம் குறைவது, நீர் இழப்பு போன்றவை முக்கியக் காரணங்கள். அதிகப் பயம், அழுகை, வெயிலில் நிற்பது போன்றவையும் மயக்கத்தை ஏற்படுத்தலாம். பொதுவாக மயக்கம் தானாகவே சில நிமிடங்களில் சரியாகிவிடும்.

★ மயக்கம் அடைந்தவரை தரையில் மெதுவாகப் படுக்கவைத்து, கால்களை ஒரு அடிக்கு உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

★ அவருக்கு நன்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

★ கழுத்து வளையாமலும் திரும்பாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் சுவாசத் தடை இல்லாமல் காப்பாற்ற முடியும்.

★ இறுக்கமான ஆடை அணிந்திருந்தால், அவற்றை சற்றுத் தளர்த்த வேண்டும். குடிப்பதற்கு எதையும் கொடுக்க வேண்டாம்.

★ அதன் பிறகும் அவர் எழவில்லை எனில், ஏதேனும் வாகனத்தின் மூலம் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

★ மயக்கமானவர் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், அவரை உடனடியாக எழுந்து நிற்க அனுமதிக்கக் கூடாது. திரும்பவும் மயக்கம் அடைந்து கீழே விழ நேரிடலாம்.

★ ஐந்து நிமிடங்கள் வரை படுக்கவைத்து, அதன் பிறகு ஐந்து நிமிடங்கள் வரை உட்கார்ந்து இருக்கச்செய்து, அதன் பிறகே எழுந்து நிற்க வைக்க வேண்டும்.


காயங்கள், சிராய்ப்புகள் ஏற்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி :

★ விபத்தில் காயம் அடைந்தவர்களைக் கையாளும்போது அதிகக் கவனம் தேவை. பதட்டத்தில் காயம் அடைந்தவரை நாம் தூக்கும்போது அதுவே எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்னைகளுக்குக் காரணமாகிவிடக்கூடும்.

★ காயம்பட்டவரைப் பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டுவந்ததும், காயம் ஏற்பட்ட புண்ணில், மண் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் ஒட்டி இருக்கிறதா என்பதைப் பார்த்து, அவற்றைச் சுத்தமான, உலர்ந்த துணியைக்கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

★ காயம் அடைந்த பகுதியைத் துணியைக்கொண்டு அழுத்திப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனால் ரத்தம் கட்டிக்கொள்வதைத் தவிர்க்கலாம்.

★ காயம் அடைந்தவரைப் படுக்கவைத்து, கை மற்றும் கால்களை இதய மட்டத்துக்கு மேல் உயர்த்திக்கொள்ள வேண்டும்.

★ கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தால், ஒரு துணியை எடுத்து, சிறு சிறு துண்டுகளாகக் கத்தரித்து, முறிவு ஏற்பட்ட கையோடு ஒரு ஸ்கேலையோ அல்லது சுருட்டிய செய்தித்தாளையோ வைத்துக் கட்ட வேண்டும்.

★ காலில் எலும்பு முறிவு ஏற்பட்டால், முறிவு ஏற்பட்ட காலுடன் இன்னொரு காலையும் சேர்த்து ஆங்காங்கே கட்ட வேண்டும்.

★ இதைத் தவிர நாமாகவே முறிந்த எலும்புகளைச் சேர்க்க நினைக்கவோ, எலும்பின் நிலையை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்லவோ முயற்சிக்கக் கூடாது. இதனால் பாதிப்புகள் அதிகரிக்க நேரிடலாம்.


மின்சாரம் தாக்கினால் செய்ய வேண்டிய முதலுதவி :

★ மின்சாரம் தாக்கியவர்களுக்கு முதலில் மின் இணைப்பைத் துண்டிப்பதே, நாம் செய்யும் முதல் உதவி.

★ மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானவர் மின் கம்பியைத் தொட்டுக்கொண்டு இருந்தால், முதலில் மெயின் ஸ்விட்ச் ஐ அணைக்க வேண்டும்.

★ ஸ்விட்ச் எது எனக் கண்டறிய முடியவில்லை என்றால், அங்கு உள்ள மொத்த மின் இணைப்பையே துண்டிக்கலாம்.

★ அதுவும் முடியவில்லை என்றால், நன்கு உலர்ந்த மரக்கட்டை போன்ற மின் கடத்தாப் பொருட்களைப் பயன்படுத்தி, மின் கம்பியில் இருந்து அவரது கையை நகர்த்தி மின் ஓட்டத்தைத் தடை செய்யலாம்.

★ மின் கடத்தாப் பொருட்களைக்கொண்டு மின் ஓட்டத்தைத் தடைச் செய்யும்போது, அப்படிச் செய்கிறவர் கண்டிப்பாக ரப்பர் செருப்பு அல்லது ரப்பர் கையுறைகளை அணிந்து இருக்கவேண்டும்.

★ உலோகப் பொருட்களைக் கொண்டு மின் இணைப்பைத் துண்டிக்கக் கூடாது.

★ பிறகு பாதிக்கப்பட்டவரின் நாடித்துடிப்புப் பரிசோதனை, சுவாசப்பாதை சோதனை போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

★ மின்சாரத்தால் கருகிப்போன உடல் பாகத்தைச் சுமார் 10 நிமிடங்கள் சுத்தமான ஈரத் துணியால் மூடி வைக்க வேண்டும். பின்னர் நீர் உறிஞ்சும் சுத்தமான துணியால் ஒன்றால் மூடிக் கட்ட வேண்டும்.

★ கழுத்துப் பகுதியைத் தொங்கவிடாமல், சீரான முறையில் முட்டுக்கொடுத்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

★ ஷாக் அடிபட்டவருக்கு வெளிப்படையாகப் பாதிப்பு ஏதும் தெரியாமல் இருக்கலாம். மின்சாரம் நம் உடலில் பாயும்போது, உள் உறுப்புகளைப் பாதிக்கச் செய்யலாம். எனவே, டாக்டரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.


மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி :

★ யாரோ நம்முடைய மார்புப் பகுதியை அழுத்துவதுபோன்ற கடுமையான வலி ஏற்படும். அதிக வியர்வை மற்றும் மயக்கம் வருவதுபோன்று இருக்கும். இப்படி ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அது மாரடைப்பாகக்கூட இருக்கலாம்.

★ 20 நிமிடங்களுக்குள் இந்த அறிகுறிகள் நின்றுவிட்டால், அது மைனர் ஹார்ட் அட்டாக்.

★ 20 நிமிடங்களுக்கு மேல் நீடித்தால் அது சிவியர் ஹார்ட் அட்டாக்.

★ இதில் எந்த வகையாக இருந்தாலும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

★ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே பாதிக்கப்பட்டவருக்கு ஆஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்க வேண்டும். இந்த மாத்திரை ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன், கட்டிப்போன ரத்தத்தைச் சரிசெய்ய முயற்சிக்கும்.

★ மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல நேரம் ஆகும் என்றால், அவருக்கு சி.பி.ஆர். முதல் உதவி அளிக்கலாம்.

★ மாரடைப்பின்போது, இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தம் தடைபடுகிறது. எனவே, எவ்வளவு சீக்கிரம் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைபெற நடவடிக்கை எடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அவரது இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.







logo