சாலை விபத்துக்கள்


👉 தரைவழிப் போக்குவரத்தில் தரைப் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்ட சாலைகளில் நடக்கக் கூடிய விபத்து சாலை விபத்து எனப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மோதியோ அல்லது சாலையின் ஓரங்களிலுள்ள மரம் அல்லது கட்டிடங்களில் மோதியோ பெரும்பான்மையான சாலை விபத்துக்கள் நடக்கின்றன.

👉 விபத்தின் காரணங்களாக வாகனத்தின் வடிவமைப்பு, வாகனம் செலுத்தப்பட்ட வேகம், சாலையின் தரம், சாலையின் வடிவமைப்பு, சுற்றுப்புறச் சூழ்நிலை, வாகன ஓட்டியின் ஓட்டுதல் திறன் மற்றும் வாகன ஓட்டியின் நடவடிக்கை ஆகியவற்றைக் கூறலாம்.

👉 விபத்தைத் தடுக்கும் முகமாக வேக கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.

👉 நம் நாட்டில் சாலை விபத்து என்பது நாம் தினமும் காலை மற்றும் மாலை பத்திரிக்கைகளில் அதிகமாக படிக்கும் ஒரு சம்பவமாக இருந்துவருகிறது. விபத்து என்பது திட்டமிடாத, எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி.

👉 விபத்தின் விளைவால் பெருத்த காயமோ அல்லது சிறிய காயமோ ஏற்படலாம். இதில் ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்புகளின் மூலம் 100க்கு 98 விபத்துக்களுக்கு காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை

1. பாதுகாப்பற்ற நிலைகள்

2. பாதுகாப்பற்ற செயல்கள்

👉 இதன் மூலம் நாம் அறிவது விபத்துக்கள் தானாக நிகழ்வதில்லை. அவைகள் உண்டாக்கப்படுகின்றன என்பது நன்கு புலனாகிறது.


விபத்தை ஏற்படுவதை பார்ப்பவர்கள் செய்ய வேண்டியவை :

👉 ஒருவர் தனது பாதையில் விபத்து ஏற்ப்பட்டதை பார்க்க நேர்ந்தால், அதன் மீது பிற வாகனங்கள் மோதி, விபத்தின் தன்மையை அதிகரிக்காதவாறு ஏதாவது ஒரு வகையில் பிற வாகனங்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும்.

👉 விபத்து நடந்த இடத்தைப் பற்றிய முழு விபரத்தை காவல்துறைக்கும், முதலுதவிக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்து, அவர்கள் வரும் வரையில் அடிபட்ட நபரை தனியே விட்டுச் செல்லாமல் உடன் இருக்க வேண்டும்.

👉 காவல்துறைக்கு தகவல் கொடுக்கும்போது, வாகனத்தின் தன்மை (பயணிகள் வாகனம் / சரக்கு வாகனம்) மற்றும் வாகனம் ஏற்றி வந்த சுமைகள் (இராசாயனப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், வெடிக்கும் தன்மை உடைய பொருட்கள், எரிபொருட்கள் போன்றவை ) பற்றிய கூடுதல் தகவல் கொடுப்பது சிறந்ததாகும்.

👉 போதிய கால அவகாசம் எடுத்துக்கொள்ளாமல் பயணம் செய்யும்போது அவசரம், சாலை விதிகளை மீறுவது மற்றும் அதிகவேகம் போன்ற செயல்களால் பயணமானது விபத்தில் முடிவடைகிறது. இரு சக்கரவாகனங்களில் பயணிக்கும் ஒருவர் அணிந்திருக்கும் ஆடைகள், பாத அணிகள், கூட விபத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றது.


சாலை பாதுகாப்பில் கடைப்பிடிக்க வேண்டிய‌ விதிமுறைகள் :

👉 வாகனம் ஓட்டும்போது கைபேசியைப் பயன்படுத்துதல் கூடாது.

👉 நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது, ஓட்டுநர் மற்றும் பயணிப்போர் வார்பட்டை(Seat Belt) அணிய வேண்டும்.

👉 மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக்கூடாது.

👉 வேகக்கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும்.

👉 பாதசாரிகள் கவனமுடன் நடைபாதையில் செல்ல வேண்டும்.

👉 இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அவசியம் அணிய வேண்டும்.

👉 பாதசாரிகள் மஞ்சள் கோடுகள் போடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும்.

👉 வாகன ஓட்டுநர்கள் போக்குவரத்து சைகைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

👉 வாகன ஓட்டுநர்கள் அவசர ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும்.

👉 வாகனங்களை அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்.

👉 நடைபாதையில் கடைகள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.

👉 18 வயதிற்கு உட்பட்டவர்கள் இரண்டு சக்கர வாகனத்தையோ, நான்கு சக்கர வாகனத்தையோ ஓட்டுதல் கூடாது. மேலே கூறிய விதிமுறைகளை முறைப்படி கடைப்பிடிப்பதன் மூலம் சாலை விபத்துக்களை தவிர்க்க முடியும்.

👉 சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் விபத்துகள் குறையும். போக்குவரத்து விதிகளை சரியாக கடைபிடிக்கும் அப்பாவி மனிதர், விதிகளை மீறும் நபரால் விபத்தில் இறக்கிறார். எனவே விழிப்புணர்வு இல்லை என்று நாமே நம்மை ஏமாற்றி கொள்ளக் கூடாது.


சாலைப் பாதுகாப்பில் உள்ள முக்கிய விதிகள் :

👉 வாகன ஓட்டுநர்கள் சாலையின் இடது புறத்திலேயே வாகனங்களைச் செலுத்துதல் வேண்டும்.

👉 முன் செல்லும் வண்டியினை வாகன ஓட்டுநர்கள் முந்திச் செல்வதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.

👉 வாகன ஓட்டுநர் குறுக்கு சாலை அல்லது பாதாசாரிகள் கடக்கும் இடங்களில் வண்டியின் வேகத்தைக் குறைத்துச் செல்ல வேண்டும்.

👉 தீயணைப்பு வாகனம், அவசர ஊர்தி, மற்றும் நோயாளர் வண்டி போன்றவைகளுக்கு வாகன ஓட்டுநர்கள் தடையின்றி வழிவிடுதல் அவசியமாகும்.

👉 வாகன ஓட்டுநர்கள் U திருப்பம் இல்லாத இடங்களில் தங்களது வாகனங்களை திருப்பக் கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில்தான் வாகனங்களைத் திருப்ப வேண்டும்.

👉 தங்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டும்போது அதற்குரிய சைகையை ஓட்டுநர் காட்ட வேண்டும்.

👉 வலது புறமாகவோ, அல்லது இடது புறமாகவோ வாகனத்தை திருப்பும் முன் சைகை காட்ட வேண்டும். அதே போல் தனது வாகனத்தை நிறுத்தும் முன் அதற்குரிய சைகையை காட்ட வேண்டும்.

👉 வாகன ஓட்டுநர்கள் U திருப்பம் செய்யும் முன்பும் அல்லது இடப்புறமோ, வலப்புறமோ திருப்பும் முன்பும் வாகனத்தில் உள்ள அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும்.

👉 வாகன ஓட்டுநர் ஒரு வழிப்பாதை என்று அறிவிக்கப்பட்ட இடத்தில் அவர் செல்வதற்கோ அல்லது வருவதற்கோ மட்டுமே பயன்படுத்த வேண்டும். செல்வழியன்று என்று அறிவிக்கப்பட்ட ஓரிடத்தினுள் உள்ளே வருதலோ, போதலோ, நுழைதலோ கூடாது.

👉 நெடுஞ்சாலைகளில் வண்டிகளுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பாதையில்தான் வண்டியைச் செலுத்த வேண்டும்.

👉 வழித்தடம் மாறும் முன் முறையான சைகையைக் காட்டி வாகனத்தைச் செலுத்த வேண்டும்.

👉 எக்காரணம் கொண்டும் மஞ்சள் கோட்டினைத் தாண்டிச் செல்லக்கூடாது.

👉 வாகன ஓட்டுநர் தேவையில்லாமல் தொடர்ந்து வாகனத்திலுள்ள ஒலிப்பானை பயன்படுத்தல்கூடாது.

👉 அமைதி இடம் என்று அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

👉 வாகனத்தில் இயந்திரக்கோளாறு இருந்தாலோ, வாகனத்தை இயக்கும் போது அதிக சத்தம் வரும் என்று தெரிந்தாலோ வாகனம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

👉 வாகன ஓட்டுநர் தனக்குமுன் செல்லும் வாகனத்திற்கும் தனது வாகனத்திற்கும் குறிப்பிட்ட அளவு இடைவெளி இருக்குமாறு சென்றால், வண்டிகள் மோதிக் கொள்ளும் விபத்தினைத் தவிர்க்கலாம்.


விழிப்புணர்வு தகவல்கள் :

👉 இருசக்கர வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக தலை கவசம் அணிந்து கொள்ளுங்கள். மித வேகம் மிக நன்று என்பதை மனதில் கொண்டு மெதுவாக பயணம் செய்யுங்கள். தொடர்ச்சியாக நீண்ட தூரம் வாகனம் ஓட்டி பயணம் செய்வதை தவிர்க்கவும்.

👉 நீங்கள் பயணம் செய்யும் பேருந்து வாகன ஓட்டுநர் ஓய்வு இல்லாமல் தொடர்ச்சியாக வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். வாகனம் ஓட்டும் போது கண்டிப்பாக செல்போன் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். தவிர்க்கமுடியாத சமயங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு பேசுங்கள். பின்னர் உங்கள் பயணத்தை தொடருங்கள்.

👉 நீங்கள் பயணம் செய்யும் பேருந்து வாகன ஓட்டுநர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது விளையாட்டாக பேசிக்கொண்டே போகாதீர்கள்.

👉 சில சமயம் நாம் சரியாக சென்றாலும் எதிரே வரும் வாகனங்கள் மிக வேகமாகவும், தவறான வழியில் வரலாம். எனவே எதிரே வரும் வாகனத்தின் நிலைமைக்கேற்ப நம்முடைய வாகனம் சரியாக செல்கிறதா என்பதை கவனித்து உங்கள் பயணத்தை தொடருங்கள் .

👉 சாலை விபத்து ஏற்பட்ட உடனே பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவேண்டும். சட்டப்பிரச்சினைகள் வருமே என பயந்து உதவ தயங்கக் கூடாது. உடனே போக்குவரத்து காவல்துறையினரிடம் விபத்து விவரம் கூறி உதவிக்கு அழைக்க வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகன எண்ணை குறிப்பெடுத்து வைத்திட வேண்டும். விபத்து, நஷ்ட ஈடு சிறப்பு வழக்கறிஞர் மற்றும் சட்ட ஆலோசகர்களை நாட வேண்டும். வாகன எண் தெரியாமல் வழக்கு போட இயலாது.

👉 பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் சேர்த்தவுடன் விபத்து பதிவேட்டில் சாலை விபத்து என மருத்துவர் எழுதுவார். அதனில் முக்கிய விவரங்கள் அடங்கும், அவை சரிபார்க்கப்பட வேண்டும். விபத்து பதிவேடு, முதல் தகவல் அறிக்கை, வரைபடம் ஆகியவைகளின் நகல்களை காவல் நிலைய முத்திரையுடன் அதிகாரி கையெழுத்துடன் வாங்கிவைத்துக் கொள்ள வேண்டும்.

👉 விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் ஆவண நகல்கள் முழுவதையும் பெறவேண்டும். விபத்து நஷ்ட ஈடு வழக்கில் சரியான ஆவணங்கள், வயது, வருமானம், சூழ்நிலை பொறுத்து லட்சத்தில் இருந்து கோடிகள் வரை நஷ்ட ஈடு கேட்டு பாதிக்கப்பட்டவர், அவர்களின் வாரிசுகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

👉 விபத்து நஷ்ட ஈடு வழக்கு தாக்கல் செய்ய அச்சம் தேவையில்லை. விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் காப்பீடு நிறுவனம் தான் நஷ்ட ஈடு வழங்கும். வாகன உரிமையாளருக்கு வழக்கு பற்றிய பயம் தேவையற்றது.

👉 வாகனத்திற்கு முழு காப்பீடு திட்டம் (Insurance Policy) எடுப்பது சிறந்தது. ஓட்டுநர் உரிமம் இல்லாதவரை, குடிபோதையில் உள்ளவரை, அளவுக்கு அதிகமாக நபர்கள் ஏற்றுபவரை வண்டி ஓட்ட அனுமதிக்கக்கூடாது. தவறி விபத்து நிகழ்ந்து விட்டால், நஷ்ட ஈட்டை வழங்க வண்டி உரிமையாளர் முழு பொறுப்பாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வண்டியை விற்க நேர்ந்தாலும் சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவேண்டும்.







logo