விபத்திற்கான காரணங்கள்


சாலை விபத்திற்கான காரணங்கள்

☞ போக்குவரத்துச் சாலைகள் மிகக் குறுகலாக இருப்பதால் பாதசாரிகளும், வாகனங்களும் குறுகிய இடைவெளிகளில் செல்வதால் விபத்துக்கள் நிகழ்கின்றன.

☞ நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் கனரக வாகனங்கள் அதிகமாகச் செல்வதால் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

☞ வயது முதிர்வு, சோர்வு, உடல்நலக்குறைபாடு, வாகனம் ஓட்டுதலில் போதிய பயிற்சியின்மை மற்றும் மனநிலைக் குறைபாடுகள் போன்ற தனிப்பட்ட காரணங்களினாலும், தட்பவெப்பநிலை, இயந்திரக் கோளாறு, ஓட்டுநரின் கவனக் குறைவு போன்ற சுற்றுச்சூழல் காரணங்களினாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

☞ குறித்த இலக்கினை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வேகமாகச் செல்லுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவை விபத்திற்கான முக்கிய காரணமாகும்.

☞ குடிப்போதையில் வாகனம் ஓட்டுவதால் வாகன ஓட்டுநர்கள் ஓட்டும் திறமையை இழப்பதோடு, முடிவு எடுக்கும் திறனையும் இழந்து விடுகிறார்கள். இதுதான் பெரும்பான்மையான விபத்துகளுக்கு முக்கிய காரணமாகும்.

பல்வேறு வகையான சாலை விபத்துக்கள் :

1. கவனக்குறைவு :

📱 பெரும்பாலான விபத்துக்களுக்கு ஓட்டுநர்களின் கவனக்குறைவு மிக முக்கிய காரணம். மொபைல்போன் பேசுவது, சாப்பிடுவது, மியூசிக் சிஸ்டத்தை இயக்குவது போன்ற பல்வேறு காரணங்களால் கவனக்குறைவு ஏற்படுகிறது. கவனக்குறைவு, வாழ்க்கையின் கனவுகளை குலைக்கின்றது.

2. அதீத வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது :

👉 வாகனத்தை கட்டுப்படுத்துவதற்கு ஏதுவான வேகத்தில் வாகனத்தை செலுத்த தவறுவதும் முக்கிய காரணமாகும். சில சாலைகளில் வேக வரம்பை மீறிச் செல்வதும் விபத்துக்கு வழிகோலுகிறது. எனவே மித வேகம், மிக நன்று.

3.மதுபோதை :

👉 குடிபோதையில் நிதானமின்றி வாகனம் ஓட்டுபவர்களால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. மதுபோதையில் இருக்கும்போது வாகனங்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. குடியானது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு விளைவிக்கக் கூடியது.

4. சாலையில் தாறுமாறாக செலுத்துதல் :

👉 பிறருக்கு அச்சுறுத்தும் வகையில், வாகனத்தை கண்ணை மூடிக்கொண்டு தாறுமாறாக செலுத்துவதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மிகப்பெரிய விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகின்றது.

5. மழை நேரம்:

👉 மழை நேரத்தில் வாகனத்தை இயக்குவதில் பல ஆபத்துக்கள் உள்ளன. சாலைகளின் வழுக்குத்தன்மை, போதிய பார்வை திறன் கிடைக்காதது, மழை நீர் தேங்கிய சாலைகளில் இருக்கும் பள்ளம் மேடுகளை கணிக்க முடியாமல் வாகனங்களை இயக்குவதால் நிச்சயம் விபத்துக்கு அடிகோலுகின்றது.

6. சிக்னல் விளக்குகள் :

👉 சிக்னலில் போக்குவரத்து விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால் நில், செல்லாதே என்றும், மஞ்சள் விளக்கு எரிந்தால் சாலையைக் கடக்கத் தயாராக இரு என்றும், பச்சை விளக்கு எரிந்தால் செல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு விளக்கு ஒளிரும்போது விதியை மீறி வாகனத்தை செலுத்துவதும் விபத்துக்கான காரணமாக அமைகின்றது.

7. பனிபடர்ந்த சாலை :

👉 பனிபடர்ந்த சாலைகளில் காரை செலுத்துவதும், கடினமான விஷயம். டயர்களுக்கு போதிய பிடிப்பு கிடைக்காமல், வழுக்கிச் சென்று விபத்தில் சிக்கும் வாய்ப்புகள் அதிகம். பனிபடர்ந்த சாலைகளில் செல்லும்போது, அதற்கான விசேஷ டயர்களை பொருத்திக்கொள்வது உகந்தது.

8. அனுபவமின்மை :

👉 புதிதாக வாகனங்களை இயக்க பழகுபவர்களும், இளைஞர்களும் அனுபவமின்மை காரணமாக சூழ்நிலைகளை கையாளத் தெரியாமல் விபத்தில் சிக்கிவிடுகின்றனர்.

9. இரவு நேர பயணம் :

👉 இரவு நேரத்தில் வாகனத்தை இயக்குவதும் கடினமான ஒன்று. ஹெட்லைட் இருப்பினும், சாலைகளை நன்கு கணித்து ஓட்டுவதற்கு இரவு நேரம் உகந்ததல்ல.

10. டிசைன் குறைபாடுகள் :

👉 கார் அல்லது வாகனங்களில் தயாரிப்பின்போது ஏற்படும் குறைபாடுகள் அல்லது வடிவமைப்பு கோளாறுகளாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே டிசைன்களை மட்டும் பார்த்து வாங்காமல், பாதுகாப்பு அமைப்புடன் காரை தேர்வு செய்வது நல்லது.

11. ஒருவழிப்பாதை :

👉 ஒருவழிப்பாதையில் அத்துமீறி செல்வது விபத்துக்கான நாமே அச்சாரம் போடும் விஷயம். சாலை எச்சரிக்கைப் பலகைகளை கவனித்து செல்வதோடு, புதிய இடங்களுக்கு செல்லும்போது நிதானமாக காரை செலுத்துவது அவசியம்.

12. எதிர்பாராத வகையில் திரும்புவது :

👉 பின்னால், எதிரில் வரும் வாகனங்களை கவனிக்காமல், கண்மூடித்தனமாக காரை திருப்புவது, யூ- டர்ன் அடிப்பது போன்றவை விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது. எனவே வாகனத்தை திருப்பும்போது எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

13. வாகனத்திற்கு பின்னால் நெருக்கமாக செல்வது :

👉 சிலர் முன்னால் செல்லும் வாகனத்துக்கு வெகு நெருக்கமாக செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். முன்னால் செல்லும் வாகனம் அவசர பிரேக் போட்டால் உங்கள் வாகனத்தை கட்டுப்படுத்துவது கடினம். எனவே, முன்னால் செல்லும் வாகனத்துடன் குறிப்பிட்ட இடைவெளி விட்டு செல்வது நல்லது. மேலும், மழை நேரங்கள், பனிக்காலங்களில் முன்னால் செல்லும் வாகனத்துடன் மிக நெருக்கமாக செல்வதை அவசியம் தவிர்க்க வேண்டும்.

14. சண்டை போடுவது :

👉 பிற வாகன ஓட்டுநர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு வாகனத்தை ஓவர்டேக் செய்வது, சண்டைப்போட்டுக்கொண்டு கோபத்துடன் வாகனத்தை தாறுமாறாக ஓட்டுவது விபத்தை ஏற்படுத்துவதற்கான காரணங்களாக அமைகின்றது.

15. திடீர் பள்ளங்கள் :

👉 நல்ல ரோடுதானே என்று வேகமாக செல்லும்போது வரும் திடீர் பள்ளங்கள் நிலைகுலைய செய்து விபத்துக்கள் ஏற்பட முக்கிய காரணமாகிறது. நிதானமாக செல்வது மட்டுமே இந்த விபத்துக்களை தவிர்க்க உதவும்.

16. சோர்வு :

👉 தொடர்ந்து வாகனத்தை இயக்கும்போது ஏற்படும் சோர்வு காரணமாகவும், இரவு நேரத்தில் அதிக தூரம் வாகனத்தை இயக்குவதாலும், கவனக்குறைவு காரணமாகவும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரண்டரை மணிநேரத்துக்கு ஒருமுறை சற்று ஓய்வு எடுத்து வாகனம் ஓட்டுவது அவசியம்.

17. டயர் பராமரிப்பின்மை :

👉 போதிய பராமரிப்பு இல்லாத டயர்களும் மற்றும் ட்ரெட் தேய்ந்து போன வழுக்கை டயர்களும் விபத்தை ஏற்படுத்தும் காரணியாகிறது. எனவே, டயர் மீது கவனம் இருக்க வேண்டும்.

18. ஓவர்டேக் :

👉 சாலையில் மற்ற வாகனத்தை ஓவர்டேக் செய்யும்போது பெரும் விபத்துக்கள் ஏற்படுகிறது. முன்னால் செல்லும் வாகனத்தை முந்தும்போது அதிக கவனத்துடனும், நிதானத்துடன் செயல்படுவது அவசியம். குறிப்பாக, இரவில் முந்தும்போது கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

19. இன்டிகேட்டர் :

👉 வளைவுகளில் திரும்பும்போது இன்டிகேட்டர் போடாமல் திருப்பும் பலரால் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகிறது. திடீரென பிரேக் போடுவதும் விபத்துக்கு வழிகோலும் விஷயமாக அமைகிறது.

20. வளைவுகளில் முந்துவது :

👉 வளைவுகளில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவதும், எதிரில் வாகனத்திற்கு போதிய இடைவெளிவிட்டு திருப்ப தெரியாததும் விபத்து ஏற்பட காரணமாகிறது. வளைவுகளில் வேகத்தை முடிந்தவரை குறைத்து செல்வதே விபத்தை தவிர்க்க உதவும்.

21. விலங்குகள் :

🐅 சாலைகளில் விலங்குகளின் நடமாட்டத்தால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. மேலும், வனப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கவனக்குறைவாகவும், வேகமாகவும் வாகனத்தை ஓட்டக்கூடாது.

22. கட்டுமானப் பகுதிகள் :

✇ சாலை செப்பனிடும் பணிகள் அல்லது புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும்போது அமைக்கப்படும் தற்காலிக சாலைகளில் கண்ணை மூடிக்கொண்டு செல்வதும், குழப்பத்தை ஏற்படுத்தும் பகுதியில் வேகமாக செல்வதும் விபத்து ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

23. வாகன பராமரிப்பு :

✇ போதிய பராமரிப்பு மேற்கொள்ளப்படாத வாகனங்களில் பிரேக் ஃபெயிலியர், டயர் வெடிப்பது, எஞ்சின் கோளாறுகள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்பட காரணமாகிறது. எனவே, வாகனம் ஓட்டும்போது கவனமாக இருந்தால் விபத்துக்களை தவிர்க்கலாம். வாகனத்தை முறையாக பராமரிப்பதும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

24. மொபைல்போன் :

📵 பயணத்திபோது மொபைல்போன் பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் சிலர். மொபைல்போனில் பேசும்போது கவனக்குறைவு கண்டிப்பாக ஏற்படும் என்பதால் அருகில் மற்றும் எதிரில் வரும் வாகனங்களை கணிப்பது கடினம். எனவே, எவ்வளவு முக்கிய அழைப்பாக இருந்தாலும் காரை ஓட்டிக் கொண்டே மொபைல்போன் பேசுவதை கண்டிப்பாக தவிர்க்கவும்.

விபத்துக்கான பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் :

☞ இயந்திரங்கள், கருவிகள், டிராலிகள் போன்ற பொருட்களை ஒழுங்குபடுத்தி வைக்காமல் ஒழுங்கற்ற நிலையில் வைத்திருப்பது.

☞ இயந்திரங்கள் மற்றும் சில சாதனங்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் பொருத்தாமல் இருப்பது.

☞ திட்டமிடாத அமைப்புகள், வழுக்கும் தரைகள்.

☞ உறுதியற்ற, ஒழுங்கற்ற படிக்கட்டு அமைப்புகள்.

☞ வாகனத்தை சரியாக கையாளும் முறைகள் இல்லாமல் இருப்பது.

☞ பாதுகாப்பற்ற ஒளி அமைப்பு, வசதிக்குறைவான வெளிச்சம், தாங்க முடியாத இரைச்சல்.

☞ இயந்திரங்களின் கூர்மையான பகுதி அல்லது உடைந்த நிலை இருப்பது.

☞ குறுகிய திருப்பங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் ஏற்படுகிறது.







logo