ஓட்டுநர்களின் கவனத்திற்கு


☢ பொதுமக்கள் நடந்து செல்லும் சாலை ஓரத்தில் சைக்கிள் உட்பட எந்த வாகனமும் ஓட்டக் கூடாது. கட்டுப்படுத்தப்பட்ட சந்திப்புகளில் போக்குவரத்துக் காவலர், சிக்னல் விளக்குகள் உள்ள இடங்களில் போக்குவரத்துச் சின்னங்களின் கட்டளைகளான 'நிற்க, வழிவிடு' சின்னங்கள் இருப்பின், அந்த இடங்களில் நின்று, இருபக்கமும் பார்த்து அருகே எந்த வாகனமும் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்புதான் கடக்க வேண்டும்.

☢ அதேபோல், கட்டுப்படுத்தப்படாத சந்திப்புகளில், இதேபோல் நின்று வேறு வாகனங்கள் வரவில்லையென உறுதிசெய்த பின்னரே கடக்க வேண்டும். ஓட்டுநர், தன்னுடைய வாகனத்தைச் சாலையின் இடதுபுறத்தில் எவ்வளவு நெருக்கமாகச் செலுத்த முடியுமோ அவ்வாறு செலுத்துவதுடன், தனக்கு எதிர்ப்புறமாக வரும் வாகனத்துக்கு, வலதுபுறமாகக் கடந்து செல்ல போதிய இடம் விட வேண்டும்.

☢ வாகன ஓட்டுநர், தான் செல்லும் அதே திசையில் செல்லும் எல்லாப் போக்குவரத்தையும், வலப்புறமாக மட்டுமே முந்திச் செல்ல வேண்டும்.

☢ ஒவ்வொரு ஓட்டுநரும் தீயணைப்பு வாகனம் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணியில் இருக்கும்போது, அவற்றுக்கு முன்னுரிமை அளித்து, ஒதுங்கி தடையின்றி செல்வதற்கு கண்டிப்பாக வழிவிட வேண்டும்.

☢ தடை செய்யப்பட்ட இடங்களிலும், நெரிசலான சாலைகளிலும் கண்டிப்பாக எந்த ஓட்டுநரும் U டர்ன் செய்யக் கூடாது. U டர்ன் செய்ய அனுமதிக்கப்பட்ட இடங்களில் பின்புறக் கண்ணாடியைப் பார்த்து, வலதுபுறம் திரும்புவதற்கான சைகை காட்டி பாதுகாப்பாகத் திருப்ப வேண்டும்.

☢ ஒருவழிப் பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில், எந்தத் திசையில் செல்வதற்கு அனுமதி உண்டோ அந்தத் திசையில் மட்டுமே செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட திசையில் இல்லாமல் எதிர்திசையில் வாகனத்தைப் பின்னால் செலுத்தக் கூடாது. வேறொரு வாகனத்தைப் பின்தொடரும்போது, மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது.

☢ மதிய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது தவறானது ஆகும்.

☢ வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட் என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திருப்பக்கூடாது.. இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

☢ சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ விளக்கை எரியவிட வேண்டும்.

☢ நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ க்கு முன்பே டிம் செய்து வண்டியை ஓட்ட வேண்டும்.

☢ நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் சிக்னல் இல்லாத இடங்களிலும், மொபைலின் கீ லாக் செய்யப்பட்ட நிலையிலும், ஏன் சிம்கார்டு இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.







logo